டாக்டர் ஜி.ராஜமோகன். ஓய்வுபெற்ற உளவியல் பேராசிரியர், சென்னை மாநிலக் கல்லூரி.

சமீபகாலமாக படித்த இளம் பிள்ளைகளிடம் ஒரு விதமான பதற்றம் தெரிகிறது. படிப்புக்கு ஏற்ற வேலை கிடைக்குமா? என்ற சந்தேகம் அதிகரித்துள்ளது. இப்போது இருப்பதைவிட இன்னும் பெரிய அளவில் முன்னேற வேண்டுமென்ற ஆசை இல்லாத மனிதனே இருக்க முடியாது. ஆனால், பலருக்கும் அது ஆசை என்ற அளவிலேயே நின்று விடுகிறது. ஏன் ஒரு சிலர் மட்டும் வெற்றி பெறுகிறார்கள்?

ஒரு சில விஷயங்கள் ஒரு சிலருக்குத்தான் வரும் என்று நாம் நினைத்துக் கொண்டிருப்பது தவறு. திறமைசாலிகள் பலரும் முயற்சி செய்து திறமைகளை அடைகின்றனர். அது அதிர்ஷ்டத்தால் வருவது இல்லை.

பயிற்சி தான் திறமையை உருவாக்குகிறது. அப்படி முறையான பயிற்சி கொடுப்பதே மனதுக்கான ஜிம்!

சாதனையாளர் ஆவது ஒரே ஓர் அசாதாரணச் செயலைச் செய்வதல்ல.அது நீண்ட காலத்துக்குச் சாதாரண செயல்களைச் சலிப்பில்லாமல் செய்துகொண்டே இருப்பதால் வருவது. ஆர்வமாக நாம் செய்யத் தொடங்கும் பல செயல்களை நாம் தொடர்ந்து செய்வதில்லை. காரணம், அதில் நாம் எதிர்பார்த்த விளைவுகள் கிடைப்பதில்லை. ஓர் இசைக் கருவியைக் கற்க ஆரம்பித்தால் நான்கைந்து வருடங்கள் கழித்துத்தான் ஓரளவுக்காவது வாசிக்க முடியும். ஆனால்,அதற்குள் நாம் ஏமாற்றம் அடைந்துவிடுகிறோம்.மனம் தொய்வடையும் காலம் இது தான்.

சாதனையாளர்கள், வெற்றி பெற்றவர்கள் இந்தக் காலகட்டத்தைச் சலிப்பில்லாமல் பொறுமையோடு கடக்கின்றனர்.

அதற்குப் பழக்கம் அவசியம்!ஒரு மனிதன் அடையும் உயரம் அவன் கொண்டிருக்கும் பழக்கங்களின் விளைவே!ஒரு விஷயத்தைப் பழகப்பழக அதைப் பல் தேய்ப்பதுபோல் ஆட்டோமேட்டிக்காகச் செய்ய ஆரம்பித்துவிடுவோம். பயிற்சி செய்வதை அன்றாடப் பழக்கமாக வைத்திருப்பவர்கள் மூடு வரட்டும் என்றெல்லாம் காத்திருப்பதில்லை. தள்ளிப்போடுவதும் இல்லை.

ஒரு சிலருக்கு இயல்பாக அது வருவதுபோல் தோன்றினாலும், அது அவர்களது பயிற்சியாலேயே வருகிறது. ஆக, பழக்கத்தின் சக்தி அபாரமானது. ஆரம்ப காலத்தில் மிகச் சிறியதாக இருக்கும் அணுவளவு பழக்கங்கள் நீண்ட காலத்தில் மலையளவாக மாறியிருக்கும்.

சலிப்பில்லாமல் நீண்ட காலம் ஒரு செயலைச் செய்ய விடாப்பிடித்தனம் தேவை.விடாப்பிடியாக முன்னேற நமது மனப்பான்மை (Mindset)மிக முக்கியம்.உங்கள் உயரத்தை(altitude) உங்கள் மனப்பான்மைதான் (attitude) நிர்ணயிக்கிறது என்பார்கள். “இவ்வளவுதான் முடியும்… இனிமேல் நம்மால் மாற/மாற்ற முடியாது என்ற நிலையான மனப்பான்மை உடையவர்களைவிட(Fixed mindset), மாற முடியும் என்ற வளர்ச்சி மனப்பான்மை உடையவரே தொடர்ந்து வெற்றி பெறுகிறார்கள்” என்கின்றனர் மனப்பான்மை குறித்து ஆராயும் உளவியலாளர்கள்.

அறிவும் திறமையும் மட்டும் இருந்தால் போதாது. உணர்ச்சிகளைக் கையாளும் அறிவு, அடுத்தவர்களின் உணர்வுகளைப் புரிந்துகொள்ளும் திறன் ஆகிய உணர்ச்சிசார் நுண்ணறிவும் (Emotional intelligence) தேவை. உணர்ச்சி வேகத்தில் என்ன செய்ய விரும்புகிறோம் என்பதைச் செய்வதைவிட என்ன செய்ய வேண்டும் என்பதைச் செய்பவர்களே வெற்றி பெறுகின்றனர். குறுகிய கால உந்துதல்களைக் குறைத்துக்கொண்டு செயலாற்றும் தன்மையேநீண்ட கால வெற்றியைத் தருகிறது.

மனிதராகப் பிறந்த அனைவருக்குமே திறமையாளராகவும் சாதனையாளராகவும் வெற்றிகரமானவராகவும் ஆகும் உள்ளார்ந்த ஆற்றல் இருக்கிறது. அதை அடையும் உரிமையும் இருக்கிறது. அதை அடையத் தடையாக இருப்பவற்றையும், அடையும் வழிகளையும், அவற்றின் பின்னால் இருக்கும் உண்மைகளையும் அறிந்து கொண்டால் சாதிக்க முடியும். தடைகளைத் தாண்டி வெற்றி பெற வாழ்த்துகள்!