கலைமாமணி டாக்டர் எஸ்.அமுதகுமார், MBBS,MCIP, PG,Dip Diabetology,F.C.G.P.

காலை ஆறு மணி ஆகிவிட்டால், நண்பர் ஒருவர் எந்த இடத்தில் இருந்தாலும் உடனே ஒதுங்குமிடம் பார்த்து (Toilet), வயிற்றைக் கிளீன் பண்ணிவிட்டுத்தான் அடுத்த வேலையைப் பார்ப்பார்.அந்த அளவுக்கு அவருடைய மலம் கழிக்கும் பழக்கம் சரியான நேரத்தில் நடக்கும். மலச்சிக்கல் என்ற வார்த்தைக்கே அவர் இடம் கொடுப்பதில்லை. ஆனால் பெரும்பாலானவர்கள் மலச்சிக்கலால் அவதிப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.அன்றாடம் மலம் கழிக்கும் பழக்கமே ஆரோக்கியமான உடலுக்கு அடிப்படை.

காரணங்கள்:

*பெருங்குடலில் இருக்கும் மலத்திலுள்ள தண்ணீர் முழுவதும் மறுபடியும் உடலுக்குள் உறிஞ்சப்பட்டு விடுவது.

*பெருங்குடலில் ஏற்படும் அலை போன்ற அசைவின் வேகம் குறைந்துவிடுவது.

*நார்ச்சத்து குறைவான உணவுகளை உண்பது.

*அடிக்கடி அதிர்ச்சி, கோபம்,உணர்ச்சி வசப்படுதல் போன்ற மனோரீதியான நிலைகள்.

*சில மருத்துவ காரணங்களாலும் மலச்சிக்கல் தோன்றும்.

யாருக்கெல்லாம் மலச்சிக்கல் தோன்றும்?

கர்ப்பிணிகளுக்கு கர்ப்பப்பையின் அழுத்தத்தால் பெருங்குடல் அமுக்கப்பட்டு, ஓரளவு மலச்சிக்கல் ஏற்படும்.

ஒரு நாள் வீட்டுச் சாப்பாடு,மறுநாள் ஓட்டல் சாப்பாடு என கண்ட இடங்களில் சாப்பிடுபவர்களும் இந்த அவஸ்தையை அனுபவிப்பார்கள்.

பால் சம்பந்தப்பட்ட உணவுப்பொருட்களை அடிக்கடி சாப்பிட்டாலும் மலச்சிக்கல் தோன்றலாம்.தொடர்ந்து மன அழுத்தம்
இருந்தாலும் பிரச்னை.

போதுமான அளவு தண்ணீர் பருகாவிட்டால் பல்வேறு பிரச்னைகள் தோன்றும்.கூடவே மலச்சிக்கலும் உருவாகும்.

எல்லா நாடுகளிலும் மலச்சிக்கலால் அவதிப்படுகிறவர்கள் இருக்கிறார்கள். 10 முதல் 30 சதவீதம் பேருக்கு இந்த பாதிப்பு இருப்பதாக தெரியவருகிறது. அதிகம் பாதிக்கப்படுகிறவர்கள் வயதானவர்கள்தான்.

பெரும்பாலானவர்கள் டாக்டரிடம் செல்லும்போது முதலிலே தங்களுக்கு மலச்சிக்கல் இருப்பதை சொல்வதில்லை. கடைசியாக சொல்வார்கள் அல்லது டாக்டர் கேட்டபின்பே அது பற்றி பேசி, அதற்கும் மருந்து தரும்படி கேட்கிறார்கள். மலச்சிக்கல் இருப்பவர்கள் டாக்டரிடம் முதலில் அதுபற்றி பேசிவிடவேண்டும். ஏன்என்றால் மலச்சிக்கல் இல்லாமல் இருந்தால்தான் ஆரோக்கியமாக வாழ முடியும்.

மலச்சிக்கல் பெரியவர்களுக்கு மட்டுமல்ல சிறு குழந்தைகளும் இருக்கிறது.பெற்றோர் கவனம் செலுத்த வேண்டும்.

ஒரு நாள்,இரண்டு நாள் ஒழுங்கான நேரத்துக்கு டாய்லெட் போகாமலிருந்தால், அதை மலச்சிக்கல் என்று தீவிரமாக எடுத்துக்கொள்ளவேண்டியதில்லை. பெருங்குடலின் அசைவுகளை அதிகப்படுத்துவதன் மூலமும்,அதிக தண்ணீர் குடிப்பதன் மூலமும், டாய்லெட் பிரச்னையை சரிசெய்து விடலாம்.

ஒரு வாரமோ, இரு வாரமோ டாய்லெட் பிரச்சினை தொடர்ந்து நீடித்தால், மலச்சிக்கல் ஏற்பட்டுவிட்டது என்று முடிவு செய்து,எதனால் ஏற்பட்டது, உணவினாலா அல்லது உடலினாலா என்று கண்டுபிடித்து அதை சரிசெய்ய முயற்சி செய்ய வேண்டும்.
கழிவறையை சுத்தமாக பராமரிக்க வேண்டும்.

மலச்சிக்கலிலிருந்து விடுபட ஆண்களில் சிலர் சிகரெட் புகைப்பார்கள்.டீ குடிப்பார்கள்.சிலர் வாழைப்பழம் சாப்பிடுவார்கள். இப்படி அவரவருக்குத் தெரிந்த,பழகிய விஷயங்களை செய்து பார்ப்பார்கள். யாருக்கு எந்த விஷயம் வெற்றியைக் கொடுத்ததோ, அதுதான் மிகச் சிறந்தது என்று மற்றவர்களிடமும் சொல்வார்கள்.

மூளைக்கும், குடலுக்கும் நிறைய சம்பந்தம் உண்டு. மூளையும்,குடலும் ஒன்றோடொன்று தொடர்பில் உள்ளது.மூளை மிகுந்த மன அழுத்தத்தில் இருந்தால்,குடலும் இறுக்கமாகத்தான் இருக்கும்.மூளை டென்ஷன் இல்லாமல் அமைதியாக இருந்தால்,குடல் இலகுவாக இருக்கும். இதனால்தான் பெரிய மூளை தலையிலும், சிறிய மூளை வயிற்றிலும் இருப்பதாக சிலர் சொல்வதுண்டு. இது ஓரளவுக்கு உண்மையே. நமக்கு வயிறு சரியாக இல்லாவிட்டால், நமது மூளை சரிவர வேலை செய்யாது. ஒவ்வொரு நாளும் காலையில் வயிறு இயல்பாகவே சுத்தமாகி காலியாகிவிடுகிறது என்றால், அதைவிட இன்பம், அதைவிட ஆரோக்கியம் வேறு எதிலும் கிடையாது.

கழிப்பறை செல்லவேண்டும் என்ற எண்ணம் வரும்போது அதை தள்ளிப்போடக் கூடாது.உடனே போய்விட வேண்டும்.பத்து நிமிஷம் கழித்துப் போய்க்கொள்ளலாம்,ஒரு மணி நேரம் கழித்துப்போய்க் கொள்ளலாம் என்றெல்லாம் நினைத்து தள்ளிப்போட்டால், நேரம் ஆக ஆக, பெருங்குடலின் கடைசிப் பகுதியில் நிற்கும் மலத்திலுள்ள தண்ணீர் உடலுக்குள் மறுபடியும் உறிஞ்சப்பட்டு, மலம் மிகவும் கடினமாகி பிரச்னையை உண்டாக்கிவிடும். ஆகவே,கழிப்பறை போகவேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்ட உடனே சென்றுவிடுங்கள்.

நார்ச்சத்து அதிகமுள்ள எந்த உணவு வகைகளைச் சாப்பிட்டாலும்,அது உடலுக்கு நல்லதே. வாழைப் பழத்தில் பெக்டின்(Pectin) என்ற கரையாத நார்ச்சத்துப் பொருள் அதிகமாக இருக்கிறது. நடுத்தர சைஸ் உள்ள ஒரு வாழைப்பழத்தில் சுமார் 3 கிராம் நார்ச்சத்து இருக்கிறது. நன்றாகப் பழுத்த மஞ்சள் பழத்தில் நார்ச்சத்து அதிகமாக இருப்பதால், பெருங்குடலின் அசைவுகள் அதிகமாக்கப்பட்டு மலச்சிக்கல் ஏற்படாது. பழுக்காத பச்சை வாழைப்பழத்தில், ஸ்டார்ச் பொருள் அதிகமாக இருப்பதால், இதுவே மலச்சிக்கலை உண்டுபண்ணிவிடும்.எனவே வாழைப்பழம் சாப்பிடுவதில் கவனம் தேவை.

வாழைப்பழத்திலுள்ள ப்ரெக்டோ ஆலிகோ சேக்கரைடு (Fructo Oligo Saccharide) என்கிற என்ஸைம், இயற்கையாக செரிமானம் ஆவதற்கும், லேசான மல மிளக்கியாகவும் வேலை செய்கிறது.

அடிக்கடி மலச்சிக்கல் ஏற்பட்டு அதோடு வயிற்றுவலி மற்றும் ரத்தம் வழிதல் ஆகியவைகளும் ஏற்பட்டால், உங்களது உணவு மண்டலத்தில் ஏதோ செரிமானப் பிரச்னை அதிகமாக இருக்கிறதென்று அர்த்தம்.உடனே உங்கள் குடும்ப டாக்டரை சந்தித்து, பிரச்சினையைத் தீர்க்க வழி காணுங்கள்.

ஒரு மனிதருக்கு ஒரு நாளைக்கு 25 முதல் 30 கிராம் நார்ச்சத்து தேவை. நார்ச்சத்து அதிகமுள்ள உணவுகளை தினமும் உணவில் சேர்த்துக்கொண்டால்,மலச்சிக்கல் ஏற்படாது.வயிறு ஊதிப்போகாமல் இருக்கவும்,குடலை முறுக்குகிற மாதிரி வலி ஏற்படாமல் இருக்கவும் நார்ச்சத்து அதிகமுள்ள உணவுகளை தினமும் உட்கொள்ளவேண்டும்.

பேரீச்சம்பழம், ஆப்பிள், பேரிக்காய், கொய்யாப்பழம், அத்திப்பழம்,ப்ரூன்ஸ், பாதாம்,பிஸ்தா, பாப்கார்ன்,அவரை போன்றவற்றை அதிகளவில் எடுத்துக் கொள்ள வேண்டும்.

போதுமான தண்ணீர், போதுமான உடற்பயிற்சி, போதுமான உடல் அசைவு, போதுமான நார்ச்சத்து உணவு இவைகள் மலச்சிக்கல் ஏற்படாமல் உடலைப் பாதுகாக்கும். கர்ப்பிணிப் பெண்களுக்கு மலச்சிக்கல் ஏற்படுவது இயல்பானது. கர்ப்பிணிகள் நார்ச்சத்து அதிகமுள்ள உணவை ஒரே நேரத்தில் அதிகமாக உண்ணக் கூடாது. அவ்வப்போது சிறிது சிறிதாக சாப்பிடுவது நல்லது.

பார்க்கின்ஸன்ஸ் நோய் உள்ளவர்களுக்கும், நரம்புப் பிரச்னை உள்ளவர்களுக்கும் மலச்சிக்கல் ஏற்பட வாய்ப்பு உண்டு, மன அழுத்தம்,மலச் சிக்கலை உண்டு பண்ணும். அதனால் உங்கள் உடல் நிலைக்கு தகுந்தபடியும், நோய்களுக்கு தகுந்தபடியும் நார்ச்சத்துள்ள உணவை உண்டு மலச்சிக்கல் இல்லாமல் பார்த்துக்கொள்ளுங்கள்.

மலச்சிக்கலுக்கான சில அறிகுறிகள்

*மலம் கழிக்க மிகுந்த சிரமப்படுவது.

*நீண்ட நேரம் எடுத்துக்கொள்வது.

*கண்ணீர் வரும் அளவுக்கு சிரமப்படுவது.

*பெருங்குடலின் அசைவுகள் மிகக் குறைவாக இருப்பது.

*மிகக் குறைவான அளவே மலம் வெளியேறுவது.

*மலம் கழித்து முடித்த பின்னரும்கூட, முழுமையாக வெளியேறாத உணர்வு இருப்பது…

*வயிறு கனத்துடன் பெரிதாக இருப்பது.

*அடிவயிற்றில் லேசான வலி இருப்பது.

*வாந்தி வருவது போன்ற உணர்வு தோன்றுவது.

*பசியின்மை.

*லேசான மூச்சுத் திணறல் ஏற்படுதல்.

*தலைவலி தோன்றுதல்.

*கண் இமைகளில் அடிக்கடி கட்டி வந்துபோகுதல்.

*நெஞ்சை வயிறு அமுக்குவதால், நெஞ்சில் ஒருவித லேசான அழுத்தம் தோன்றுதல்.