
சென்னையில் இயங்கி வரும் எம்.ஜி.எம். ஹெல்த்கேர் மருத்துவமனையில் 80 வயது மதிக்கத்தக்க ஒருவருக்கு இதயத்தில் எந்திர பம்பை பொருத்தி சாதனை செய்திருக்கிறார்கள்.
ஓய்வுபெற்ற முதியவர்,முற்றிய இதய செயலிழப்பு மட்டுமின்றி, குறைந்த ரத்த அழுத்தம், மோசமடைந்து வரும் சிறுநீரகச் செயல்பாடு மற்றும் நுரையீரலில் நீர் கோர்த்தல் போன்ற பல்வேறு இணை நோய்களாலும் பாதிக்கப்பட்டிருந்தார்.
உடலின் மற்ற பகுதிகளுக்குப் போதுமான ரத்தத்தை பம்ப் செய்ய முடியாத அளவுக்கு இதயம் மிகவும் பலவீனமடைந்திருந்தது.இந்த முக்கியப் பணியை இதயத்தின் இடது கீழறை செய்கிறது. இந்நிலை ‘இடது கீழறை செயலிழப்பு’ அல்லது ‘அட்வான்ஸ்டு லெஃப்ட் வென்ட்ரிகுலர் சிஸ்டோலிக் ஹார்ட் ஃபெயிலியர்’ என்று அழைக்கப்படுகிறது. இதன் காரணமாக, அவர் அடிக்கடி கடுமையான மூச்சுத்திணறலால் அவதிப்பட்டார். மேலும் பலமுறை தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட வேண்டியிருந்தது. தனது மூச்சுத்திணறல் மற்றும் அடிப்படை இதயப் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டி,அவர் இந்த மேம்பட்ட சிகிச்சையைத் தேர்ந்தெடுத்தார்.
அவரது முதிர்ந்த வயது,பலவீனமான உடல்நிலை மற்றும் மோசமடைந்து வரும் சிறுநீரகச் செயல்பாடு ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு, மருத்துவக்குழு இதய மாற்று அறுவை சிகிச்சையைத் தவிர்த்துவிட்டு, அதற்குப் பதிலாக LVAD கருவியைப் பொருத்த முடிவு செய்தது.இந்தக் கருவி இதயத்தின் இடது கீழறையின் உள்ளே பொருத்தப்பட்டு, ரத்தத்தை பம்ப் செய்யும் பெரும்பகுதி பணியை ஏற்றுக்கொள்கிறது.
இயக்குநர் டாக்டர் கே.ஆர். பாலகிருஷ்ணன் மற்றும் இணை இயக்குநர் டாக்டர் சுரேஷ் ராவ் கே.ஜி ஆகியோர் இந்த LVAD பொருத்தும் சிகிச்சையை மேற்கொண்டனர். இந்தச் சிகிச்சை வெற்றிகரமாக அமைந்தது,இதைத் தொடர்ந்து நோயாளி மருத்துவமனையில் மூன்று வாரங்கள் தங்கி குணமடைந்த பிறகு வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டார். அவர் இப்போது யாரையும் சாராமல் சுயமாக வாழ்கிறார், வழக்கமான நடைப்பயிற்சிக்குச் செல்கிறார்.
மேலும் சுறுசுறுப்பான மற்றும் உற்சாகமான வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார்.
80 வயதிலும் யாரையும் சார்ந்து இல்லாமல், சுறுசுறுப்பாக வாழ வேண்டுமென்று விரும்பி, சென்னையில் பல இடங்களிலும் மருத்துவ ஆலோசனை பெற்றும் நல்ல தீர்வு கிடைக்கவில்லை. கடைசியாக எம்.ஜி. எம். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று நலமாக இருக்கிறார்.
முதியோர் மருத்துவ சிகிச்சையில் இது ஒரு முன்னோடி சாதனை என்று குறிப்பிடலாம்.
-பவித்ரன்.

