ஒரே இதழ் கொண்ட மலர் ‘ஓரிதழ்’ தாமரை. தாமரைப் பூவின் நிறத்தில் (வெளிர் சிவப்பு) இது இருக்கும். தாமரை மலருக்கும் ஓரிதழ் தாமரைக்கும் தொடர்பு கிடையாது. தாமரைபோல இது நீர்த்தாவரம் அல்ல. நிலத்தில் வளரும் மிகச் சிறிய செடி வகையினம். ஓரளவுக்கு ஈரப்பதம் மிக்க இடங்களில் ஒற்றை மலரைச் சுமந்துகொண்டு காட்சிதரும். நீளமான இலைகளை உடையது. இதன் இலைகளை நீரிலிட, குழகுழப்புத்தன்மை உண்டாகும்.

‘தாதுவை உண்டாக்கும் தனிமேகத்தைத் தொலைக்கும்’ என்ற ஓரிதழ் தாமரைக்குச் சொந்தமான மருத்துவப் பாடல், விந்தணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், தேகத்துக்குப் பொலிவைக் கொடுக்கவும் இது சிறந்த மருந்து என்று குறிப்பிடுகிறது. ஓரிதழ் தாமரையை (முழுத் தாவரத்தையும்) தினமும் காலையில் உணவு முறைக்குள் சேர்த்து வர, உடலுக்குப் பலமுண்டாகும்.

குளிர்ச்சித்தன்மை கொண்ட ஓரிதழ் தாமரை, யானை நெருஞ்சில், அம்மான் பச்சரிசி போன்ற மூலிகைகளை ஒன்றாக அரைத்து மோரில் கலந்து சாப்பிட்டால், வெள்ளைப்படுதல் குணமாகும். ஓரிதழ் தாமரையை உலர்த்திப் பொடிசெய்து, பனைவெல்லம் கலந்து அரை தேக்கரண்டி வீதம் பாலில் இருவேளை சாப்பிட்டுவர, தாது விருத்தியாகும்.

விந்தணுக்களின் உருவ அமைப்பில் உள்ள குறைபாடுகளை நிவர்த்தி செய்ய, விந்தணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்க, அவற்றின் செயல்திறனைச் சிறப்பாக்க ஓரிதழ் தாமரை உதவுவதாக ஆய்வு தெரிவிக்கிறது. கட்டுப்பாடில்லாத நீரிழிவு நோயாளிகளுக்கு ஏற்படும் நுண்சிரை பாதிப்புகளைத் தடுக்க, இது பெருமளவில் பயன் தருகிறது.

மன அழுத்தத்தைக் குறைக்க, ஓரிதழ் தாமரை மற்றும் நீர்ப்பிரம்மியை அரைத்துத் தலையில் பூசும் முறை பின்பற்றப்படுகிறது. விரைவில் விந்து முந்தும் நிலையைக் குணமாக்க, ஓரிதழ் தாமரைச் சூரணம் சிறந்த மருந்து. சிறுநீர் எரிச்சலைக் குறைக்க, ஓரிதழ் தாமரையை நீரிலிட்டுக் கொதிக்க வைத்துக் காய்ச்சிக் குடிக்கலாம்.

சுரத்தைக் குறைக்கும் கஷாய வகைகளில் ஓரிதழ் தாமரையையும் சேர்க்கும் வழக்கம் இருக்கிறது. பொடுதலை, செம்பரத்தை, மருதாணி இலைகளோடு இதன் இலைகளை அரைத்து நல்லெண்ணெயில் இட்டுக் காய்ச்சி, முடித் தைலமாக பயன்படுத்த, கூந்தல் வளர்ச்சி அதிகரிப்பதுடன், பொடுகுத் தொந்தரவின் தீவிரமும் குறையும்.