-டாக்டர் ஜி.ராஜமோகன்

ன நலம் முக்கியம்.மனம் மகிழ்ச்சியாக இருந்தால்… எந்நாளும் நன்நாளாக மலரும். வாழ்க்கையின் எல்லா துயரங்களுக்கும் காரணம் நம் மனம் தான்.அதை சரி செய்ய நமக்குள்ள ஒரே ஆயுதமும் மனம் மட்டுமே!

மனித மனதின் நுட்பமான அறிவுதான், இந்த உலகம் இவ்வளவு முன்னேற வழிவகுத்துள்ளது.
ஒவ்வொரு சாதனையும் மனதின் வெற்றிதான்.

அதேநேரம் இங்கு நிகழும் ஒவ்வொரு அவலத்துக்கும் காரணம்,மனித மனம்தான்.
இத்தனைக் கொலைகள், வல்லுறவுகள், வன்முறை நிகழ்வுகள்,நோய்கள் எல்லாவற்றுக்கும் காரணம் மனித மனம்தான்.உலகின் அத்தனை சாத்தியக்கூறுகளுக்கும் காரணம் மனித மனம்தான்.

அதனால் அதன் முழு வீரியத்தை அறிவதுபோல், அதன் அத்தனை வக்கிர குணத்தையும், பலவீனங்களையும் அறிவது முக்கியம்.மனதை உள்நோக்கிப் பார்க்கத் தொடங்கும்போது மனமும் வாழ்க்கையும் சீரடையத் தொடங்கும்.இது பேருண்மை!.

தியானம் வெளியில் இல்லை

மனதை உள்நோக்கிப் பார்க்கச் சிறந்த வழி தியானம்.தியானம் என்பது ஒரு மத நம்பிக்கை சார்ந்த வழிமுறை மட்டும் அல்ல.அதற்கு தெய்வ நம்பிக்கை அவசியம் இல்லை.ஏதோ ஒரு நம்பிக்கை உறுதியாக இருந்தால்,பற்றும் பழக்கமும் விரைவில் ஏற்படும். அதனால்தான் இறை நம்பிக்கை உலகெங்கும் போதிக்கப்படுகிறது.இறை நம்பிக்கை இல்லாவிட்டாலும் வேறு ஏதோ ஒரு பெரிய நம்பிக்கை இருப்பது நல்லது.அது மனிதநேயமாக இருக்கலாம்.அல்லது இயற்கையின் மீதான மதிப்பாக இருக்கலாம்.அல்லது கலை,இலக்கியம், இசை மீதான ஆர்வமாக இருக்கலாம்.அல்லது உங்களை நீங்கள் கரைத்துக்கொண்டு செய்யும் வேலையாக இருக்கலாம்.எந்தச் செய்கையில் உங்கள் மனம் கரைந்து காணாமல் போகிறதோ அதுதான் தியானம்.

மனதை அமைதிப்படுத்தி அதைக் காணாமல் போக வைப்பதன் மூலம்தான் நேரம் எனும் கட்டுப்பாட்டிலிருந்து நழுவிப்போவீர்கள்.

உங்கள் உடல் வேறு ஒரு தாள கதியில் இயங்கத் தொடங்கும்.அந்தக் கணத்தில் உடலும் இல்லாமல் மனமும் இல்லாமல் உங்களை நீங்கள் உணர்வீர்கள்.அந்த அனுபவம்தான் உங்களையும் உங்கள் வாழ்க்கையையும் அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்லும்.இந்த அனுபவத்தைத் தரவல்ல தியான நிலை,உங்களுக்கு எந்தச் செயலில் கிடைக்கிறது என்று கண்டுகொள்வதுதான் நிஜமான அறிவு.அதைச் செய்யத்தான் நீங்கள் படைக்கப்பட்டீர்கள். அதில்தான் உங்கள் முழு ஆற்றலும் வெளிப்படும்.

தியானத்தை வெளியில் தேடி ஓடாதீர்கள்.அதற்கு நீங்கள் உங்களோடு இருக்க வேண்டும். தன்னை மறந்த நிலையில்தான் உங்களையே நீங்கள் முழுமையாக உணர்வீர்கள்.இதைச் சொற்களால் படித்துப் புரிந்துகொள்வது கடினம்.ஆனால், செயல் அனுபவமாகப்
பெறுவது ஆனந்தம். வாழ்த்துகள்!

– ஹெல்த் அண்ட் பியூட்டி (Read Health and beauty)