தமிழர்களின் பாரம்பர்ய உணவுகள் எத்தனையோ இருக்க,நம் உணர்வோடு கலந்து ஒன்றாகிவிட்டது பிரியாணி. கிராமங்களில்கூட ஏதாவது விசேஷம் என்றால், ‘பிரியாணி உண்டாப்பா?’ என்று கேட்பது சர்வ சாதாரணமாகிவிட்டது. நகரங்களில் வீதிகள் தோறும் தெரு விளக்கு உண்டோ இல்லையோ, ஒரு பிரியாணிக் கடை இருப்பது கண்கூடு. ‘ஒன் ப்ளேட்’, ‘ஹாஃப் ப்ளேட்’, ‘குவார்ட்டர் ப்ளேட்’… என்பவை மெள்ள மெள்ள வழக்கொழிந்துகொண்டிருக்க, ‘ஒரு கிலோ பிரியாணி’, ‘பக்கெட் பிரியாணி’ என்றெல்லாம் அளவுகளிலும் மாற்றங்கள் தொடங்கிவிட்டன. ஆம்பூர்,ஆற்காடு, திண்டுக்கல், ஹைதராபாத் என்று வகைவகையான பெயர்களில் விற்பனையாகிறது.

பிரியாணிக்காக மணிக்கணக்கில் வரிசையில் நின்று காத்திருந்து,முண்டி அடித்து வாங்கிச் சாப்பிடுகிறார்கள்.

ஆனாலும், ‘பிரியாணி உடல் நலத்துக்கு நல்லது தானா? என்கிற கேள்வி பலருக்கும் எழாமல் இல்லை.

ஆரம்பத்தில் முஸ்லிம்களால் மட்டும் தயாரிக்கப்பட்டு வந்த பிரியாணி,இன்றைக்குப் பலரால்,பல வழிமுறைகளில் தயாரிக்கப்படுகிறது. இதைத் தொடர்ந்து சாப்பிடுவது ஆரோக்கியத்துக்குக் கேடு.இதில் கொழுப்பைக் கூட்டும் பல பொருட்கள் சேர்க்கப்படுவதால், உடல்பருமனுக்கு வழிவகுக்கும்.அது இதயக் கோளாறுகள் வரை கொண்டு போய்விட்டுவிடும்.நம் வயிற்றுக்குக் கொஞ்சம் ஓய்வு இருப்பதுதான் எப்போதும் நல்லது. ஆனால்,பிரியாணி கொஞ்சம் கடினமான உணவு என்பதால், செரிமானம் ஆவது தாமதப்படும் என்றெல்லாம் சொல்லப்படுகிறது.

பிரியாணி சாப்பிடுவதால் நன்மைகள் அதிகமா, தீமைகள் அதிகமா என்றால் நன்மைகளே அதிகம் என்று சொல்லலாம். இன்னொரு விஷயம், இங்கே யாராவது தினமும் பிரியாணி சாப்பிடுகிறார்களா? அப்படிச் சாப்பிட்டால்தான் அது தீமை.முஸ்லிம் குடும்பத்தினரை எடுத்துக்கொண்டால், பிரியாணி இல்லாமல் அவர்களின் வாழ்க்கையே இல்லை. அவர்களின் பாரம்பர்யத்தில் சுகம், துக்கம் இரண்டு நிகழ்வுகளிலுமே பிரியாணிக்கு முக்கிய இடம் உண்டு.அப்படி இருக்கும்போது, பிரியாணியால் அவர்களின் உடல்நிலை மிகவும் மோசமாக அல்லது பெரிய அளவில் இதயநோய், உடல் பருமன் ஆகியவற்றால் பாதிக்கப்பட்டிருக்கிறதா என்ன? ஆகவே. வாரத்துக்கு ஒருமுறை பிரியாணி சாப்பிடுவது, எப்போதாவது விசேஷத்தின்போது சாப்பிடுவது எந்தவிதமான பாதிப்பையும் ஏற்படுத்தாது.இதுதான் உண்மை.

அளவோடு சாப்பிட்டால் எந்தப் பாதிப்பும் இல்லை.அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்பது
பிரியாணிக்கும் பொருந்தும். பிரியாணிக்குத் தொட்டுக் கொள்ள வெங்காயம் வைப்பார்கள்.இது செரிமானத்துக்கு உதவும்.முஸ்லிம்களில், கத்திரிக்காய் தொக்கு (கூட்டு) மாதிரி ஒன்று வைப்பார்கள். கத்திரிக்காய்க்கு மருத்துவக் குணம் உண்டு.இதை ‘சொலேனம் (Solanum) ஃபேமிலியைச் சேர்ந்தது’ என்று சொல்வார்கள். தாவரங்களிலேயே அதிகமான மருத்துவக் குணத்தைக் கொண்டது இந்தக் குடும்பம்தான்.

‘பிரியாணியைச் சரியான முறையில் தயாரிக்காமல் விற்கிறார்கள்,அதில் கலப்படம் நடக்கிறது’ என்றெல்லாம் சொல்லப்படுவது உண்டு.அதெல்லாம் உண்மைதான். வியாபாரம்,போட்டி என்று வரும்போது, பிரியாணியில் சேர்க்கும் பொருள்களும் மாறுபடத்தான் செய்யும். அதில் நல்லது எது என்று ஆராய்ந்துதான் வாங்க வேண்டும்.வாரத்துக்கு ஒருமுறை,எப்போதாவது சாப்பிடுவதில் தவறில்லை.எனவே, வீட்டில் தூய முறையில் தயாரிக்கப்பட்ட அல்லது கடைகளில் ஆரோக்கியமாகத் தயாரிக்கப்பட்டதுதான் என்கிற உத்தரவாதமுள்ள பிரியாணியைச் சாப்பிடுவதில் தவறில்லை.வீட்டில் செய்து சாப்பிடுவது மலிவாகவும் இருக்கும், ஆரோக்கியமானதாகவும் இருக்கும்.அதேபோல வளரும் குழந்தைகளுக்கு என்றால் மட்டன் பிரியாணி பிரச்னை தராது. நடுத்தர வயதைத் தாண்டியவர்கள் மட்டனைத் தவிர்த்து விட்டு அளவோடு சிக்கன் பிரியாணி சாப்பிடுவதே நல்லது.

ஆக,சுத்தமான முறையில் தயாரிக்கப்பட்ட பிரியாணியை எப்போதாவது சாப்பிடுவது நல்லது. ஊட்டச்சத்து அளிக்கக் கூடியது.எளிதாக செரிமானம் ஆகவேண்டும் என்கிறவர்கள்,இதைச் சாப்பிட்டதும் இளஞ்சூடாக சிறிது நீரையோ,கிரீன் டீயையோ அருந்தலாம். பிரியாணி அமிர்தம். அளவோடு வைத்துக்கொள்வது அவ்வளவு நல்லது!