
-ராஜ் வேலவன்.
கனிகளுக்கு உள்ளே விதைகள் இருப்பது இயற்கையின் நியதி. அந்த இயற்கையின் கோட்பாட்டை அடித்து நொறுக்கும் வகையில் கனிக்கு வெளியே முந்திக்கொண்டு காணப்படும் அழகான படைப்புதான் முந்திரி!
முந்திரிப் பருப்பு ஆண்களின் விந்தணுக்களை பெருக்குகிறது.ஆண்மைக்கு வலு சேர்க்கிறது.உடலுக்கு ஊட்டமளிக்கிறது.
கெட்ட கொழுப்பைக் குறைத்து, நல்ல கொழுப்பை அதிகரிக்க முந்திரிப்பருப்புகள் உதவும். கொழுப்புச்சத்தை ஈரலில் சேர்த்து முறையாக அதை உடைக்கும் பண்பு முந்திரிக்கு இருப்பதாக ஆராய்ச்சி தெரிவிக்கிறது. உப்பு சேர்க்காத, எண்ணெயில் பொரிக்காத முந்திரியை அளவோடு சாப்பிட்டால், அது இதயத்துக்கான தோழனே. முந்திரியில் உள்ள நிறைவுறாத கொழுப்பு அமிலங்கள், நார்ச்சத்து, புரதங்கள், வைட்டமின்கள் மற்றும் ஆன்டி ஆக்ஸிடன்ட் பொருள்கள், உடலின் முக்கிய உறுப்புகளுக்கு நோய் தடுக்கும் பாதுகாப்பு அரணாகத் திகழ்கின்றன.
பல் ஈறுகளுக்கு பலம் கொடுப்பதுடன் எலும்புகளுக்கும் வலு கொடுக்கும். அளவு அதிகரிக்காமல் முந்திரியைச் சுவைக்க, செரிமானத்துக்கும் துணை நிற்கும். ரத்த அழுத்தத்தைக் கட்டுப்பாட்டுக்குள் வைக்க முந்திரியின் நலக்கூறுகள் உதவுவதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. உடல் செல்கள் விரைவாக முதிர்ச்சி அடைவதைத் தடுக்கும் செயல்பாடும் முந்திரிக்குச் சொந்தம்.
விலை சற்று அதிகம்தான்.மருந்து மாத்திரைகளுக்கு செலவிடுவதைவிட சத்தான உணவுகளுக்கு செலவிட்டால் நோய் பாதிப்புகள் இல்லாமல் இளமையுடன் வாழலாம்.

