முனைவர் மா.ஆ.தீபா,M.Sc, M.Phil,Ph.D.உதவிப் பேராசிரியர்,
தாவரவியல் துறை, அரசு கலைக் கல்லூரி (தன்னாட்சி), கோயம்புத்தூர்.

தாவரங்களின் விதைகள் நமக்கு உணவாக மட்டுமின்றி பல்வேறு விதமான உடல் நலக்குறைவுகளை சீர்படுத்தும் அருமருந்தாகவும் பயன்படுத்தப்பட்டு வருகின்றது. காலம் காலமாக பல்வேறு உடல் உபாதைகளுக்கும் பல தாவரங்களின் விதைகள் மருந்தாக பயன்படுத்தப்படுகிறது.

இந்த மாதம் நாம் அற்புதமான ஒரு விதையைப் பற்றியே காணவிருக்கிறோம்.அது ஆளி விதை. இந்த ஆளி விதை ஆனது தொன்று தொட்டு சித்த, ஆயுர்வேத மருத்துவத்திலும் தென்கிழக்காசிய நாடுகளின் மருத்துவ முறைகளிலும் மிகப்பெரிய இடத்தை பிடித்துள்ளது. ஆங்கிலத்தில் இதை FLAX விதைகள் என்று அழைப்பர். இதற்குரிய தாவரவியல் பெயர் “லைனம் உசிட்டாடிசிமம்” ஆகும்.

6000 முதல் 7000 ஆண்டுகளுக்கு முந்திய விவசாய பயிராக ஆளி விதைகள் அறியப்படுகிறது. இவற்றில் இரண்டு வகை உண்டு. எண்ணெய் ஆளி விதைகள் நாம் உண்ணக்கூடியவை.நார்ச்சத்து கொண்ட FIBRE FLAX SEED எனப்படும் ஆளி விதைகள் நாம் உண்ணக்கூடியதாக இருப்பதில்லை. இவற்றின் தண்டுகளில் இருந்து பெறப்படும் நார்கள் லினன் ஃபேப்ரிக் (linen Fabric) எனப்படும் உயரிய ரக இழைகளை தருகின்றது.இந்த லினன் துணிகள் தற்போதைய காலகட்டத்தில் பெரும்பாலானோரால் விரும்பப்படும் உடைகளை தைக்க பயன்படுகிறது. இந்த வகை ஆளி விதைகளானது அடுத்த பயிரிடுதலுக்காக மட்டுமே சேகரிக்கப்படுகிறது.

ஆனால், எண்ணெய் சத்து அதிகம் கொண்ட ஆளி விதை வகையை நாம் உணவாக அல்லது மருந்தாக உட்கொள்ளலாம். 7500 ஆண்டுகளுக்கு முன்பே இது துருக்கி நாட்டில் பயிர் செய்யப்பட்டதாக தொல்லியல் தளங்களின் ஆய்வுகள் மூலம் அறியப்படுகிறது. பிறகு சிரியா, எகிப்து மற்றும் மெசபடோமியா நாடுகளுக்கு பரவி, பின்னர் ஐரோப்பிய கண்டம் முழுவதும் வளர்க்கப்பட்ட பயிராக மாறியது. குளிர் பிரதேசங்களில் நன்கு வளரும் இவை பின்னர் பல்வேறு சூழல்களிலும் வளர்க்கப்படும் பயிராக உருமாற்றம் அடைந்தது. இன்றைய சூழலில் கனடா,ரஷ்யா, கஜகஸ்தான்,சீனா மற்றும் இந்தியா ஆகிய நாடுகள் உலகளாவிய அளவில் மிக அதிக உற்பத்தியை செய்கின்றன.

வாத குறைபாடுகளை சமன் செய்யும் அருமருந்தாகும் இந்த ஆளி விதை. இதன் வழவழப்பு தன்மையின் காரணமாகவே இதனை தற்போதைய காலத்தில் மேல் பூச்சு அழகு சாதனங்களில் அதிகமாக பயன்படுத்துகின்றனர்.ஆனால், இதனை உள் மருந்தாக எடுத்துக் கொள்ளும்போதுஸதான் இதன் அதீத மருத்துவ குணம் நமக்கு கிடைக்கிறது.

இரவு முழுவதும் நீரில் ஊற வைக்கப்பட்ட விதைகளை மென்று உண்பதால் குடல் பகுதியில் உள்ள புண்கள் ஆறும்.மேலும் வடித்த நீரை பருகுவதால் நெஞ்செரிச்சல், சிறுநீர் கழிக்கும் போது ஏற்படும் எரிச்சல் போன்றவை குணமாகும். மருத்துவ குணம் மட்டுமின்றி நல்ல ஊட்டச்சத்துக்களையும் உள்ளடக்கியுள்ள இந்த ஆளி விதைகள்.ஒமேகா 3 பேட்டி ஆசிட் எனப்படும் மீன்களில் இருந்து கிடைப்பதாக அறியப்பட்ட சத்துப் பொருளை அதிக அளவில் கொண்டுள்ளது. . அத்தியாவசியமான ஒமேகா-3 கொழுப்பு அமிலமான ஆல்பா-லினோலெனிக் அமிலத்தின் மிகச் சிறந்த தாவர மூலங்களில் ஆளி விதையும் ஒன்றாகும்.சுமார் 1.8 முதல் 2 கிராம் வரையிலான அளவில் ஒரு மேசை கரண்டி அரைத்த ஆளி விதையில் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் இருக்கும்.

உணவு செரிமானத்திற்கு என நாம் அதிக அளவில் பயன்படுத்த பரிந்துரைக்கப்படும் கரையக்கூடிய மற்றும் கரையாத நார்ச்சத்துக்களையும் இந்த ஆளி விதைகள் அதிகமாக கொண்டுள்ளது. இந்தச் சத்து சீரான குடல் இயக்கத்தை ஊக்குவிப்பதுடன் நல்ல செரிமானத்தையும் ஊக்குவிக்கிறது. லிக்னன்கள் எனப்படும் மருத்துவப் பொருள் நிறைந்திருப்பதால் அலர்ஜியை குறைக்கவும், செல்களை பாதுகாக்கவும் உதவுகிறது.

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை மலச்சிக்கல் உள்ளோருக்கு மலத்தை இலகுவாக்கி உடல் கழிவுகளை முற்றிலும் வெளியேற்ற இவ்விதைகள் உதவுகின்றன. இதனாலேயே இரைப்பை சம்பந்தமான பல நோய்களுக்கும் ஒரு எளிய தீர்வாக இது அமைகிறது.

ஊறவைக்கப்பட்டு அல்லது அரைத்த பொடியாக உட்கொள்ளப்படும் பொழுது தொண்டைக்கு இதமாகவும்,வறட்டு இருமலை கட்டுப்படுத்தவும், சுவாசப் பாதையில் ஏற்படும் எரிச்சலை தணிக்கவும், மென்மையான படலமாக தொண்டையில் பரவி இதமளிக்கிறது. நீரிழிவு நோய் மற்றும் சிறுநீர்ப்பை சம்பந்தமான உடல் உபாதைகளை போக்க பயன்படுத்தப்படும் என்ற குறிப்பு, “சுஷ்ருத சம்ஹிதா” எனப்படும் ஆயுர்வேத மூல நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ப்ரீமெனோபாஸ், மெனோபாஸ் மற்றும் போஸ்ட் மெனோபாஸ் என மாதவிடாய் நிற்கும் காலங்களில் ஏற்படும் பல்வேறு உடல் உபாதைகளான உடல் சூடு, ஒழுங்கற்ற மாதவிடாய் சுழற்சி என அனைத்திற்கும் ஆளி விதையில் உள்ள பைட்டோஈஸ்ட்ரோஜன் நல்ல மருந்தாக பயன்படுகிறது. இது பல்வேறு பாரம்பரிய மருத்துவர்களால் பரிந்துரைக்கப்பட்ட மருத்துவ குறிப்பு ஆகும்.

இவ் விதைகளை வறுத்து பொடியாக்கி அரை ஸ்பூன் அளவிற்கு அன்றாடம் உட்கொள்வதால் இத்தகைய நன்மைகளை பெறலாம் என்பது ஒரு சிறப்பு.

ஆளி விதைகள் நம் இதயத்திற்கு மிகவும் உகந்ததாகும். நரம்பு வலி,இடுப்பு வலி மற்றும் மூட்டு வலி போன்ற வாத சமநிலை இல்லாததால் ஏற்படும் இடர்பாடுகளுக்கு சிகிச்சை அளிக்க நாட்டுப்புற மருத்துவத்திலும் நம் பண்டைய மருத்துவ முறைகளிலும் அதிகமாக பயன்படுத்தப்பட்டுள்ளது.

இத்தகைய பல்வேறு மருத்துவ குணங்களை உள்ளடக்கிய ஆளி விதைகளை நாம் எளிதாக பயன்படுத்தலாம். அரைத்த பொடியாக அல்லது வறுத்த விதைகளாக மென்று உண்ணலாம்.நீரில் ஊற வைத்து ஜெல்லி போன்ற விதைகளை காலை உணவுடன் சேர்த்தும்,பிற பழங்களுடனும் உட்கொள்ளலாம். அல்லது பழச்சாறுகளுடன் கலந்தும் அருந்தலாம். அரைத்த ஆளி விதைகளை தண்ணீர் அல்லது பாலுடன் கொதிக்க வைத்து ஒத்தடம் கொடுக்கும்போது கொப்பளங்கள் சரியாகும்.சீழ் கட்டிகள் அல்லது தோல் அலர்ஜிக்கும் மேல் பூச்சாக பூசலாம்.இதன் ஜெல்லி போன்ற நீரில் ஊற வைக்கப்பட்ட கரைசல் கண்களில் ஏற்படும் எரிச்சல் மற்றும் சிவப்பை போக்கவும் கண்களுக்கு குளிர்ச்சி ஊட்டவும் பயன்படுத்தப்படுகிறது.

விதைகளில் காணப்படும் இந்த ஜெல் போன்ற பொருளானது முடி வளர்ச்சியை தூண்டுவதாகவும் தலையின் தோல்பகுதி வறண்டு விடாமல் காக்கவும் முடி உதிர்வை தடுக்கவும், பொடுகை குறைக்கவும் பல்வேறு தயாரிப்புகளில் பயன்படுத்தப்படுகிறது.

உடல் ஆரோக்கியத்திற்கு மட்டுமல்ல உடலின் அழகை மேம்படுத்தவும் ஆளி விதைகள் பெரும் பங்கு வகிக்கின்றன. இயற்கையான வழவழப்பு தன்மை கொண்ட பாலி சேகர் இடுகளை கொண்டுள்ள இவ் விதைகள் முகத்தில் பூசினால், ஈரப்பதத்தை தக்க வைத்து தோலின் மென்மையை கூட்டுகிறது.

இதில் உள்ள ஆல்பா லினோலெனிக் அமிலமானது முகத்தில் ஏற்படும் சிவப்பு நிற அலர்ஜி மற்றும் முகப்பருக்களை குணப்படுத்தும் தன்மை கொண்டுள்ளது. அதிக அளவிலான ஆன்ட்டி ஆக்சிடென்ட்கள் முகத்தில் ஏற்படும் வறட்சியை போக்கி மென்மையை அதிகரிப்பதால் முகச்சுறுக்கங்களை போக்கும் தன்மையை கொண்டுள்ளது. தலைமுடி மென்மையாக இருக்கவும்,காய்ந்த அல்லது உடைந்த முடியின் வேர்க்கால்களை ஊட்டப்படுத்தி முடியின் வளர்ச்சியை தூண்டுகிறது. நன்கு அரைக்கப்பட்ட விதைகள் முகத்தில் தேய்த்தால்,இறந்த செல்களை நீக்கி புத்துணர்வான தோற்றத்தை தரும். இயற்கை தரும் எளிய மற்றும் பாதுகாப்பான அழகு சாதன பொருள் என்பதால், இளம் தலைமுறை அதிகளவில் பயன்படுத்தி வருகிறார்கள்.

இத்தகைய மருத்துவ நற்குணங்களை கொண்டுள்ள ஆளி விதைகளை நாம் வாங்கி பயன்படுத்தும்போது கவனிக்க வேண்டிய சில விஷயங்கள் உண்டு.

ஆர்கானிக் விதைகள் தானா என்பதை உறுதி செய்து வாங்க வேண்டும்.ஏன் எனில் கேட்மியம் போன்ற ஹெவி மெட்டல்ஸ் (கன உலோகங்கள்) மண்ணில் அதிகமாக உள்ள இடங்களில் வளர்க்கப்படும் ஆளி விதைகளில் கேட்மியம் அதிகமாக காணப்படுகிறது. இந்த தாவரமானது சுற்றுச்சூழலில் இருக்கும் சில விஷ பொருட்களை உறிஞ்சி கொள்ளும் தன்மையை கொண்டுள்ளது. எனவே அவ்வாறான இடங்களில் இருந்து வளர்த்து பெறப்படும் ஆளி விதைகள் நம் உடலுக்கும் நச்சுத்தன்மையை கொடுக்கும் என்பதால்,எங்கு வளர்க்கப்பட்டது என்பதனை அறிந்து,அல்லது தரமான விதை என்று சான்று அளிக்கப்பட்ட விதைகளையே நாம் வாங்கி பயன்படுத்த வேண்டும்.

இன்றைய காலகட்டத்தில், கலப்படம் என்பது இல்லாத பொருளே இல்லை எனலாம். இதற்கு ஆளி விதைகளும் ஆளி விதையின் பொருட்களும் விதிவிலக்கு அல்ல.ஆளி விதையின் எண்ணெய் கடைகளிலிருந்து வாங்கப்படும்போது அதில் தரம் குறைவான பல எண்ணெய்களும் கலப்படம் செய்தே விற்கப்படுகிறது. இதனால் இந்த எண்ணையின் முழுமையான மருத்துவ குணம் நமக்கு கிடைப்பதில்லை.

ஆளி விதையின் எண்ணெய் பயன்படுத்துவதற்கு பதிலாக ஆளி விதைகளை ஊறவைத்து அரைத்து அப்படியே பயன்படுத்தினால் இந்த தரக்குறைவான எண்ணெய் கலப்படத்திலிருந்து தப்பலாம்.மேலும் அரைத்த ஆளி விதைகளை பொடியாக நாம் வாங்கும்போது அளவு அதிகரிப்பதற்கு என அதனுடன் சர்க்கரை பொருட்களையும் கார்ன் ஸ்டார்ச் எனப்படும் மக்காச்சோள மாவில் இருந்து பெறப்படும் மாவு பொருளையும் அதிக அளவில் கலப்படம் செய்து விற்கப்படுகிறது. எனவே ஆளி விதைகளாகவே வாங்கி இதனை நன்கு வறுத்து அல்லது காய வைத்து பொடியாக்கி பயன்படுத்துவதை நல்லது.

இத்தகைய மருத்துவ நற்குணங்களை உள்ளடக்கிய ஆளி விதைகளை நாமும் அன்றாடம் பயன்படுத்தி நன்மை பெறுவோமாக.