குழந்தை இல்லாத தம்பதியரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.9 ஆண்டுகளாக குழந்தைப்பேறு இல்லாத 37 வயது பெண்ணுக்கு ரோபோ சாதன உதவியுடன் ‘இன்ட்ராசைட்டோபிளாஸ்மிக் ஸ்பெர்ம் இன்ஜெக்‌ஷன்’ (ICSI)சிகிச்சையை, தமிழ் நாட்டில் முதன் முறையாக சென்னை,
பெருங்குடி அருகில் உள்ள கந்தன்சாவடியில் இயங்கி வரும் தியா கருத்தரிப்பு மற்றும் மகப்பேறு மையம் செய்து சாதனை செய்துள்ளது.

இந்த அதிநவீன கருத்தரிப்பு சிகிச்சையின் மூலம் அந்தப் பெண் கர்ப்பம் தரித்து,முழு கர்ப்ப காலத்திற்குப் பிறகு சுகப்பிரசவம் மூலம் ஆரோக்கியமான பெண் குழந்தையை பெற்றெடுத்தார்.

மருத்துவக் குழு, வழக்கமான இக்சி முறைக்குப் பதிலாக,ரோபோ உதவியுடனான இக்சி முறையைப் பயன்படுத்தி, ஒவ்வொரு முதிர்ந்த கருமுட்டைக்குள்ளும் ஒற்றை விந்தணுவைச் செலுத்தியது. மூன்று கருமுட்டைகளும் கருத்தரித்து, உருவாகிய கருக்கள் 5-வது நாள் வரை வளர்ச்சியடைந்து இளம்கரு (பிளாஸ்டோசிஸ்ட்) நிலையை அடைந்தன. மீண்டும் ரோபோடிக் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, ஜனவரி 12,2026 அன்று 5 நாள் வளர்ச்சி அடைந்த ஒரு வளர்க்கருவை மருத்துவக் குழுவினர் கருப்பையில் பொருத்தினர். இயல்பான,சிக்கல் இல்லாத கர்ப்ப காலத்தின் இறுதியில் ஒரு ஆரோக்கியமான பெண் குழந்தை பிறந்தது.

தியா கருத்தரிப்பு மற்றும் மகப்பேறு மையத்தின் இயக்குநரும் மகப்பேறியல் நிபுணருமான டாக்டர் கீர்த்தனா அஸ்வின் தலைமையிலான பல்துறை மருத்துவக் குழு இந்த சிகிச்சை செயல்முறைகளை மேற்கொண்டது. இதில் மயக்கவியல் நிபுணர் டாக்டர் பூவண்ணன் மற்றும் மூத்த கருவியலாளர் திருமதி ஸ்ரீநித்யா கே.ஆகியோர் சிகிச்சை மற்றும் கருவளர்ச்சியியல் செயல்முறைகளுக்கு உறுதுணையாக இருந்தனர்.

டாக்டர் கீர்த்தனா அஸ்வின் கூறுகையில், “தமிழ்நாட்டில் ரோபோ உதவியுடன் முதல் முறையாக இக்சி சிகிச்சையை மேற்கொண்டதிலும்,அந்த சிகிச்சை வெற்றிகரமான கர்ப்பமாக மாறி, ஆரோக்கியமான குழந்தை பிறந்ததைக் காண்பதிலும் பெருமகிழ்ச்சி அடைகிறோம். இந்தப் பெண், ஏறக்குறைய ஒன்பது ஆண்டுகளாக கருத்தரிப்புக்காக பல சவால்களோடு காத்திருந்தார்.பல ஆண்டு விடாமுயற்சி மற்றும் நம்பிக்கைக்குப் பிறகு,இந்தக் குழந்தை பிறந்திருப்பது அவருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் மிகச்சிறப்பான பரிசு.கருத்தரிப்பு சிகிச்சைகளில் துல்லியத்தை மேம்படுத்தும் தொழில்நுட்பங்களை ஆராய்ந்து பயன்படுத்தி வரும் நிலையில்,இந்த வெற்றிகரமான கருத்தரிப்பும், பிரசவமும் எங்கள் மருத்துவக் குழுவிற்கும் ஒரு முக்கியமான சாதனை நிகழ்வாகும்,” என்றார்.

“கருமுட்டை இரண்டு பரிமாண (2D)அமைப்பாகத் தோன்றினாலும், அது மென்மையான முப்பரிமாண (3D) கோள அமைப்பாகும். வழக்கமான இக்சி-யில் உறிஞ்சும் விசை மூலம் பிடிக்கப்படும்போது இயந்திரவியல் அழுத்தம் ஏற்படலாம். ரோபோடிக் இக்சி-யில் மெக்கானிக்கல் கிரிப்பர் மூலம் கருமுட்டை நிலையாகப் பிடிக்கப்படுகிறது. இது கருமுட்டையைத் துல்லியமாக கையாள உதவுகிறது. வழக்கமான முறையை விட, இம்முறையில் இளம்கரு வளர்ச்சியின் விகிதம் அதிகமாக இருப்பதை தரவுகள் காட்டுகின்றன,” என்று அவர் விளக்கினார்.

இப்பெண்ணுக்கு பிறந்திருக்கும் பெண் குழந்தை, தமிழ்நாட்டின் முதல் ‘ரோபோ இக்சி’ குழந்தை என்ற பெருமையை பெறுகிறது என்றார் ” டாக்டர் கீர்த்தனா அஸ்வின்.

இன்றைய தம்பதியர், திருமணத்தை தள்ளிப் போடுகிறார்கள். பெண்களுக்கு வயது அதிகரிக்க, அதிகரிக்க கருத்தரிப்பதற்கான வாய்ப்புகள் குறைகின்றன. உடற்பயிற்சி இல்லாமை,
மன அழுத்தம், மோசமான வாழ்க்கை முறை, தவறான உணவு கலாச்சாரம், கருக்குழாய் அடைப்பு, தைராய்டு குறைபாடு, கருமுட்டை வெளியாவதில் பிரச்னைகள், விந்தணு குறைபாடு… போன்ற காரணங்களால் குழந்தையின்மையை பிரச்சனை ஏற்படுகிறது.

திருமணம் ஆன ஓராண்டுக்குள் கருத்தரிக்காவிட்டால் தம்பதியர் ஒன்றாக சேர்ந்து மருத்துவரை சந்தித்து ஆலோசனை பெற வேண்டும்.நவீன மருத்துவம் குழந்தை பிறப்பதற்கு நிச்சயமாக உதவும் என்றார் டாக்டர் கீர்த்தனா அஸ்வின்.

-பவித்ரன், ஹெல்த் அண்ட் பியூட்டி.