ராமச்சந்திரா மருத்துவக்கல்லூரி சி.எம்.ராதிகா பேட்டி

மனித குலத்தின் முன் நிற்கும் தலையாய பிரச்னை எது என்று கேட்டால்…வலி என்றுதான் பெரும்பாலோர் சொல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.

உடல் வலி,கை வலி, கால் வலி,மூட்டு வலி,முழங்கால் வலி,முதுகுத் தண்டு வலி…என உயிரை எடுக்கக்கூடிய வலியின் வேதனையை சொல்லிமாளாது.

சென்னை,போரூர் ராமச்சந்திரா மருத்துவக்கல்லூரி பிசியோதெரபி மாணவர்களுக்கு வலியை போக்கும் மருத்துவ அறிவியலை,தேன் கலந்து,வலி இல்லாமல் புன்னகையோடு, உற்சாகமாக, சொல்லித்தரும் உதவிப் பேராசிரியர் சி.எம்.ராதிகா. 23 ஆண்டுகள் அனுபவம் மிக்கவர்.
அவரது பேட்டி…

*பிசியோதெரபி என்பது மருந்தில்லா மருத்துவம் என்று சொல்லலாமா?

பிசியோதெரபியில் எந்தவித மருந்தும் கொடுப்பதில்லை என்பதால் இப்படி சொல்லலாம்.
எங்களது நோக்கம்…வலி ஏற்படும் வழிகளைப் போக்கி பாதிக்கப்பட்ட பகுதிகளை மீண்டும் இயல்பு நிலைக்கு கொண்டு வருவதுதான்.

பிசியோதெரபி பயிற்சியில் வலியை நீக்குவதற்காக சில கருவிகளை பயன்படுத்துகிறோம்.பிசியோதெரபி மருத்துவம் வலிக்கான நிவாரணம் மட்டுமல்லாமல், வலியே வராமல் உடலை பாதுகாத்துக் கொள்ளவும், வந்தபின் பக்க விளைவுகள் இல்லாத சிகிச்சை மேற்கொண்டு வாழ்நாளில் மீண்டும் வலி வராமல் தடுக்கும் பயிற்சிகளை உள்ளடக்கியது என்று பெருமையாக சொல்லலாம்.

*முதுகில் கடும் வலி அல்லது காலில் சுளுக்கு.யாரிடம் சிகிச்சைக்கு போவது?டாக்டரிடமா? அல்லது பிசியோதெரபிஸ்டிடமா?

இது போன்ற பிரச்னைகளுக்கு டாக்டரிடமும் போகலாம், பிசியோதெரபிஸ்டிடமும் போகலாம்.
டிஸ்பங்சன் என்பது ஒரு மூட்டின் செயல் திறன் தற்காலிகமாகவோ, நிரந்தரமாகவோ நின்று விடுவது தான்.(எலும்புகள் சேரும் இடத்தை மூட்டு என்று கூறுகிறோம்).
டிஸ்பங்சன் என்பது தசைப் பிடிப்பின் காரணமாகவும் வரலாம். நேரடியாகவும் வரலாம்;நோய் காரணமாகவும் வரலாம்.இப்படி டிஸ்பங்சன் காரணமாக பாதிப்பு உண்டானால் நேரடியாக பிசியோதெரபிஸ்டிடம் சிகிச்சைக்கு வரலாம்.ஆனால், நோய் காரணமாக பாதிப்பு ஏற்பட்டு, அதனால் டிஸ்பங்சன் ஏற்பட்டால்… உதாரணமாக முதுகு எலும்பில் உண்டாகக்கூடிய காசநோய். அப்போது டாக்டரின் சிகிச்சையைப் பெற்று அந்த நோய் தீர்ந்த பிறகு, வலியில்லாமல் இருக்க பிசியோதெரபிஸ்ட்டின் உதவியை நாடலாம்.

*வலி பிரச்னையால் அதிகம் பாதிக்கப்படுவது ஆண்களா? பெண்களா?

எல்லோருக்கும் வலி பிரச்னைகள் உண்டு.ஆண்களை விட பெண்களுக்கு அதிகம் என்று சொல்லலாம். அதற்கு முக்கிய காரணம்,வீட்டுப் பராமரிப்பு என்பது சொல்லித் தெரிய வேண்டியதில்லை.

பல பெண்கள் வீட்டு வேலைகளையும், அலுவலக வேலைகளையும் சேர்த்து பார்க்க வேண்டிய நிர்ப்பந்தத்தில் இருக்கிறார்கள். அவர்களது சூழ்நிலை காரணமாக உடற்பயிற்சியில் ஈடுபட முடியாது. நடைப்பயிற்சியும் செய்ய முடியாது. மன அழுத்தம் அதிகமாக இருக்கும்.வீட்டில் வாஷிங் மெஷின், மிக்ஸி,கிரைண்டர்,வாக்குவம் கிளீனர் என்று எந்திர சாதனங்களின் பயன்பாட்டால் உடல் உழைப்பு குறைந்து எடை அதிகரிக்கிறது. அதனால் ஏராளமான பிரச்னைகள் வருகின்றன.

ஆண்களுக்கும் உடல் பருமன் பிரச்னை உண்டு. உடல் பருமன் அதிகரிக்கும்போது மூட்டுகள் சீக்கிரமாக தேய்மானம் அடைகிறது. அதனால் எல்லா மூட்டுகளிலும் வலி வரும்.வலி வந்தால் நடமாட்டம் குறையும்.அதனால் எல்லாவிதமான பிரச்சனைகளும் வரும்.

*உடல் பருமன் அவ்ளோ பிரச்சனை தரக்கூடியதா?

உடல் பருமன் பெண்களுக்கு மட்டுமல்ல ஆண்களுக்கும் பல்வேறு விதமான பிரச்னைகளை கொடுக்கக்கூடியது. உடலில் அதிகப்படியான கொழுப்பு சேருவதால் ஏற்படும் ஒரு நாள்பட்ட நோயாகும்.இது உடலின் முக்கிய உறுப்புகளின் செயல்பாட்டை பாதித்து,பல கடுமையான உடல்நல பிரச்னைகளை ஏற்படுத்தலாம்.

சர்க்கரை நோய், இதய நோய் கொழுப்பு கல்லீரல் நோய்,எலும்பு மற்றும் சுவாச பிரச்சனைகள் வரலாம்.அதிகப்படியான எடை இருந்தால் நடக்க முடியாது,தொடர்ந்து மூட்டு வலி வரும், மூட்டுத் தேய்மானம் அதிகரிக்கும். இதனால் அன்றாடம் செய்யக்கூடிய எல்லா பணிகளும் பாதிக்கப்படலாம். உடலில் கொழுப்பு சேர்வதால் பக்கவாதம் ஏற்படவும் வாய்ப்பு உண்டு.

*உடல் பருமன் இல்லாமல் வாழ முடியாதா?

ஆரோக்கியமான வாழ்க்கைக்கு உடல் எடை சீராக இருக்க வேண்டும்.அவரவர் உயரத்துக்கு ஏற்ற அளவில் உடல் எடை இருந்தால், உடல் பருமன் என்ற பேச்சுக்கே இடமில்லை.

எடை பற்றிய விழிப்புணர்வு தான் முக்கியம்.உடல் பருமனை குறைக்க உணவுக் கட்டுப்பாடு, வழக்கமான உடற்பயிற்சி மற்றும் ஆரோக்கியமான வாழ்வியல் மாற்றங்கள் ஆகிய மூன்றும் மிக அவசியமாகும்.

இனிப்புகள், குளிர்பானங்கள், பேக்கரி உணவுகள் தவிர்க்கப்பட வேண்டும். காய்கறிகள், கீரைகள்,பழங்கள், முளைகட்டிய பருப்பு வகைகளை உணவில் அதிகம் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

50 வயதுக்கு மேற்பட்டவர்கள் வாரம் 5 நாட்கள் தினமும் குறைந்தது 30 முதல் 40 நிமிடங்கள் வேகமான நடைப் பயிற்சி,ஓட்டம், சைக்கிள் ஓட்டுதல், நீச்சல் அடித்தல் போன்ற பயிற்சிகளை தொடர்ந்து செய்து வர வேண்டும்.

இளம் வயதினர் தேவையான பயற்சிகளை செய்வது முக்கியம். விளையாட்டிலும் ஆர்வமாக ஈடுபட்டால் உடல் எடை கட்டுப்பாட்டில் இருக்கும். மூளையும் சுறுசுறுப்பாக இயங்கும்.தோற்றம் இளமையாக, கவர்ச்சியாக இருக்கும்.மன அழுத்தம் இல்லாமல் வாழ்ந்தால் ஆரோக்கியம் உறுதி.தொந்தி ஏற்படாமல் வாழ்வது நல்லது.

*முதுமையில் தடுமாறி விழுவது தான் தீராத பிர்ச்னை.இதற்கு என்ன தீர்வு?

வயது அதிகரிக்கும் போது,தசைகள் பலவீனமடையும். இளம் வயதிலிருந்து உடற்பயிற்சியி செய்து வந்தால், முதுமையில் இது போன்ற பிர்ச்னைகள் வராமல் தவிர்க்க முடியும்.

முதியோர்களுக்கு வரக்கூடிய முக்கியமான பிரச்சனையே தடுமாறி விழுவது தான்.ஒரு முறை தவறி விழுந்து விட்டால்,சிகிச்சை எடுத்துக்கொண்டு நலம் அடைந்தாலும் மறுபடியும் நடப்பதற்கு பயம் வரும்; தயங்குவார்கள். அதனால் உடல் இயக்கம் குறைந்து மோசமான பாதிப்புகள் ஏற்படலாம்.

இதை தவிர்க்க, சர்க்கரை அளவை கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டும்.ரத்த அழுத்தம் சீராக இருக்க வேண்டும். மருந்து மாத்திரைகளை தவறாமல் எடுத்துக் கொள்ள வேண்டும். கழிவறையில், பக்கவாட்டில் கைப்பிடிகள் அமைத்து தருவது முக்கியம்.தரை ஈரம் இல்லாமல் இருக்க வேண்டும். படுக்கை அறையில் போதிய வெளிச்சம் இருக்கிறதா என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும். முதியவர்கள் தனிமையில் இருந்து மனம் வருந்தக்கூடாது. தனிமை கொடியது. குடும்பத்தில் உள்ளவர்கள் அனைவரும் முதியவர்களோடு கலந்து பேசி, மகிழ்ச்சியான வாழ்க்கை முறையை அமைத்துத் தருவது முக்கியம்.

*உங்களோட ஸ்பெஷாலிட்டி என்ன?

23 வருட அனுபவம் இருக்கிறது. நரம்பியல் துறையில் ஆர்வம் அதிகம். பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டவர்கள் நடக்க முடியாமல் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாவார்கள். அவர்களுக்கு நம்பிக்கை அளித்து, படிப்படியாக நடக்க வைத்து சிகிச்சை அளித்து வருகிறேன்.

தனது வேலைகளை செய்ய யாரையும் சார்ந்து இல்லாமல்… சுயமாக செய்வதற்கு ஊக்கப்படுத்துவது பிசியோதெரபிஸ்ட்டின் பாராட்டுக்குரிய பணியாகும்.ஒரு அடி கூட எடுத்து வைத்து நடக்க முடியாமல் அவதிப்படுபவர்களை…நம்பிக்கை அளித்து கொஞ்சம் கொஞ்சமாக அவர்களை நடக்க வைப்பது என்பது மிகப்பெரிய சாதனை ஆகும்.

*ராமச்சந்திரா மருத்துவக் கல்லூரியில்… பிசியோதெரபி பயிற்சியின் சிறப்பு அம்சம் என்ன?

ராமச்சந்திரா மருத்துவக் கல்லூரிக்கு தேசிய அளவில் நல்ல பெயர் உள்ளது. மருத்துவக் கல்விக்கு புகழ்பெற்ற நிறுவனம். லட்சக்கணக்கான மருத்துவ மாணவர்கள் உருவான கல்வி மையம்.இங்கு பிசியோதெரபி மாணவர்கள் பயிற்சி பெற தேவையான எல்லா விதமான வாய்ப்புகளும், வசதிகளும் உள்ளன. ஏராளமான நோயாளிகளை பரிசோதிக்கவும், பயிற்சி பெறவும் நல்ல வாய்ப்புகள் உள்ளதால் சிறந்த மாணவர்கள் உருவாகிறார்கள்.

நான் ஒரு பிசியோதெரபிஸ்ட் என்ற வகையில் எனது அன்பான வேண்டுகோள் என்னவென்றால்…

“மக்கள் தங்களது வாழ்க்கை முறையை சுறுசுறுப்பாக வைத்துக் கொள்ள வேண்டும்.தினமும் தவறாமல் காலையில் நடைப் பயிற்சியில் ஈடுபட வேண்டும். காலையில் முடியாவிட்டால் மாலையிலாவது நடக்க வேண்டும்.

“நீங்கள் உங்கள் வாழ்க்கை முறையை சுறுசுறுப்பாக வைத்துக் கொண்டால்,எந்த நோயும் உங்கள் பக்கம் வரவே வராது. ஆரோக்கியமாக, ஆனந்தமாக வாழ மனமார்ந்த வாழ்த்துகள்” என்றார் உதவிப் பேராசிரியர் ராதிகா.

அவரது ஆசிரியர் பணிகளை பாராட்டி, வாழ்த்தி விடைபெற்றோம்.

தகவல் தொடர்புக்கு:
Radhika c.m,
Assistant Professor.
9841376961
Ramachandra medical College.

சந்திப்பு: எம்.எஸ்.அருள்வேல்.