
குடிதண்ணீர் சுத்தமானதாக இருந்தால் தான் குடும்பத்தினர் அனைவரும் நோய் பாதிப்புகளில் இருந்து தப்பித்து ஆரோக்கியமாக இருக்க முடியும்.
இன்று பல வீடுகளிலும் குடிநீர் தேவைக்கு ஆர்.வோ யூனிட்டை அமைத்துக் கொள்கிறார்கள். அதை பொருத்துவதோடு நில்லாமல் சரியாக பராமரிக்க வேண்டும். அப்போதுதான் சுத்தமான குடிநீருக்கான எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும்.
*ஆர்.ஓ (RO), யூவி (UV – Ultra Violet), யூ.எஃப் (Ultrafiltration),ஓஸனேட்டர் (Ozonator) என தண்ணீர் சுத்திகரிப்பு முறைகள் பலவகையாக உள்ளன.இப்போது சந்தையில் ஆர்.ஓ, யூ.வி ஆகிய இரண்டு சுத்திகரிப்பு முறைகள்தான் அதிகமாகப் பயன்பாட்டில் இருக்கின்றன.
*புது ஆர்.ஓ யூனிட் வாங்கும் முன்னர், உங்கள் வீட்டின் தண்ணீரின் தரத்தை பாருங்கள். ஏனென்றால், ஒவ்வொரு ஏரியா/நிலத்தின் தண்ணீரின் தன்மைக்கு ஏற்றாற் போல வாட்டர் ப்யூரிஃபையர் தேவைப்படும். உங்கள் வீட்டில் உள்ள தண்ணீரின் தன்மைக்கு ஏற்ப ஆர்.ஓ போட வேண்டுமா அல்லது யூ.வி போட வேண்டுமா என்பதை முடிவு செய்ய வேண்டும்.
*ஆர்.ஓ சர்வீஸ் செய்பவரை வீட்டுக்கு அழைத்து, உங்கள் வீட்டில் உள்ள தண்ணீர் எப்படிப்பட்டது என்பதைப் பரிசோதிக்கச் சொல்லுங்கள். சிறந்த நிபுணர்களின் ஆலோசனை அவசியம்.
*ஒரு முறை ஆர்.வோ.வை பொருத்திய பிறகு அப்படியே அதை விட்டு விடக்கூடாது. அது சரியாக இயங்குகிறதா என்பதை சீரிய இடைவெளிகளில் கவனிக்க வேண்டும்.
*தண்ணீர் எவ்வளவு நேரத்தில் கேனில் நிரம்புகிறது என்பதை கவனித்து வாருங்கள்.அதில் ஏதேனும் கவனிக்கத்தக்க மாற்றம் இருந்தால், சர்வீஸ் நிபுணரிடம் ஆலோசனை பெறுவது முக்கியம்.
*தண்ணீர் சுத்திகரிப்பு முறையாக நடைபெறுகிறதா என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.
*தண்ணீர் சுத்திகரிப்பு சாதனத்தில் ஃபில்டர்கள் அவ்வப்போது பழுதாகலாம்.அதை கவனிக்காமல் இருந்தால் தண்ணீர் சுத்தம் இல்லாமல் இருக்கும்.
*ஃபில்டர்கள் சரி இல்லாவிட்டால் தயக்கம் இல்லாமல் மாற்ற வேண்டும்.
*சாதனத்தின் வெளிப்பகுதியை நாமாகவே சுத்தம் செய்யலாம். உள்பகுதிகளை விவரம் தெரிந்த சர்வீஸ் நிபுணர்களின் உதவியை நாடித்தான் சுத்தம் செய்ய வேண்டும்.
*ஒரு ஆர்.வோ. சாதனத்தின் ஆயுட்காலம் என்பது அதை நீங்கள் பராமரிக்கும் விதத்திலும் சர்வீஸ் செய்யப்படும் விதத்திலும்தான் இருக்கிறது.சர்வீசே செய்யாமல் விட்டால் மூன்றே ஆண்டுகளில் கூட பழுதடைய வாய்ப்புள்ளது.
*சிலர் மலிவான விலையில் கிடைக்கும் ஃபில்டர்களை ஆன்லைனில் வாங்கி தாங்களாகவே பொருத்திக் கொள்கிறார்கள். ஃபில்டர்களின் தரம் முக்கியம்.தரத்தில் சமரசம் செய்தால் சுத்தமான தண்ணீர் கிடைக்காமல் போகலாம்.
*நீண்ட நாட்களுக்கு வெளியூர் செல்வதாக இருந்தால்,ஆர், வோ.சாதனத்தின் தண்ணீர் முழுவதையும் வெளியேற்றி விடுங்கள்.
*குடும்ப ஆரோக்கியத்துக்கு அடிப்படை சுத்தமான குடிநீர். அதில் அதிக கவனம் செலுத்த வேண்டும்.
-எம். ஜெயஸ்ரீ.

