-டாக்டர் கு.கணேசன், எம்பிபிஎஸ்

பாதங்களில் காணப்படும் வியர்வைச் சுரப்பிகளில் வியர்வை சுரப்பது குறைவதால், அங்கு சருமம் உலர்ந்து வெடிக்கிறது. அந்தவெடிப்புகளைப் ‘பித்தவெடிப்புகள்’ என அழைக்கிறோம். பாதங்களின் அடியிலும் பக்கவாட்டிலும் வெடிப்புகள் காணப்படுவது இயல்பு. பக்கவாட்டில் உள்ள வெடிப்புகள் அதிகமாகவும், கடுமையாகவும், அடியில் உள்ள வெடிப்புகள் சற்றே குறைவாகவும் காணப்படும்.

பொதுவாக, பித்தவெடிப்பு கடுமையான பனிக்காலத்திலும், கோடையிலும் தொல்லை கொடுக்கும்; உடற் பருமன் இருந்தால் இது அடிக்கடி ஏற்படும். வெறும் காலில் நடப்பவர்களுக்கு இது ஏற்படும் வாய்ப்பு அதிகம். அல்லது பொருத்தமில்லாதகாலணிகளை அணிந்தாலும் இது ஏற்படலாம். நீண்ட நேரம் நின்று வேலை பார்ப்பது பித்த வெடிப்பை வரவேற்கும்.

காலணிகள் ஏற்படுத்தும் ஒவ்வாமையும் பித்த வெடிப்புக்கு ஒரு காரணமாகலாம். நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கு நரம்புகள் பாதிக்கப்படுவதால், இந்த வெடிப்புகள் நிரந்தரமாகவே தொல்லை கொடுக்கும். உடலில் நோய் எதிர்ப்பு ஆற்றல் குறைவாக இருந்தாலும், தைராய்டு சுரப்புக் குறைபாடு, சொரியாசிஸ் நோய் போன்றவை இருந்தாலும் இதே நிலைமைதான்.

இந்தக்காரணங்களில் உங்களுக்கு எது ஒத்துப்போகிறது என்று பாருங்கள். அந்தக் காரணத்தைக் களைந்து விட்டால், பித்த வெடிப்புகளும் விடை பெற்றுவிடும்.

பித்தவெடிப்புகளை ஆரம்பத்திலேயே கவனித்து தகுந்த சிகிச்சை பெற்றுக் கொண்டால், விரைவில் குணமாகும். காலம்தாழ்த்தினால், வெடிப்புகள் சருமத்தையும் தாண்டிஆழமாகச் சென்று விடும். அல்லது அவற்றில் பாக்டீரியா, பூஞ்சை போன்ற தொற்றுக் கிருமிகள் தொற்றிக் கொள்ளும். அப்போது வலிஏற்படும். காய்ச்சல், நெறிகட்டுதல், ரத்தம் வருதல் போன்ற துணை அறிகுறிகளும் சேர்ந்து தொல்லைகள் அதிகமாகும். அதிலும் நீரிழிவு நோய் இருந்தால், பித்த வெடிப்புகள் ஆறுவதற்கு நாளாகும்.

ஆரம்ப நிலையில் உள்ள பித்த வெடிப்பைக் குணப்படுத்த, ஈரத் தன்மையைத் தரும் தேங்காய் எண்ணெய், ஆலிவ் எண்ணெய், லிக்விட் பாரபின் எண்ணெய் போன்றவற்றில் ஒன்றை காலிலும் பாதங்களிலும் தடவலாம். இதேபோல் ஈரத்தன்மையை ஏற்படுத்தும் வேறு களிம்புகளையும் மருத்துவரின் ஆலோசனையின் பேரில் பயன்படுத்தலாம்.

பாதங்களில் தொற்றுள்ளவர்களுக்குத் தகுந்த ஆன்டி பயாடிக் மருந்துகள் அல்லது பூஞ்சை எதிர்ப்பு மருந்துகள் தேவைப்படும். சிலருக்கு வலி நிவாரணிகளும் தேவைப்படலாம். இந்தத் தொல்லை மீண்டும் ஏற்படாமலிருக்க, பாதங்கள் எப்போதும் ஈரத்தன்மையுடன் இருக்க வேண்டியது அவசியம். அதற்குப் பாதங்களை அடிக்கடி தண்ணீரில் ஈரப்படுத்திக் கொள்ளவேண்டும். பனிக்காலத்து இரவுகளில், ஈரப்படுத்தும் களிம்புகளைப் பாதங்களில் பூசிக் கொண்டு, காலுறைகளையும் அணிந்து கொள்ள வேண்டும்.