பதறிய காரியம் சிதறும் என்பது முதுமொழி. எந்த வேலையை செய்தாலும் அதில் மனதை ஒருநிலைப்படுத்த வேண்டியது அவசியம். இது வெளிவேலைக்கு மட்டுமல்ல.. சாப்பிடுவதற்கும் அவசியம். தட்டில் உணவை வைத்துக் கொண்டு வேறு எந்த சிந்தனையிலோ இருந்தால், அந்த சாப்பாடு ருசிக்காது. உடலிலும் ஒட்டாது. எந்த வேலையாக இருந்தாலும் அதனை செய்யும்போது, முழு கவனத்தையும் செலுத்தி முடிக்க வேண்டும். அப்படிச் செய்யும் காரியம்தான் நிறைவினைத் தரும். கவனச் சிதறலோடு செய்யப்படும் எந்த காரியமும் முழுமையான பலனைத்தராது. அதில் திருப்தியும் ஏற்படாது.

கார் ஓட்டிக் கொண்டிருந்தால், கவனத்தை சாலையிலும், கார் ஓட்டுவதிலும் வைக்க வேண்டும். அப்படி செய்யாமல் கவனத்தை சிதற விட்டால் விபத்து ஏற்பட்டு விடும். பிரேக்கை அழுத்துவதற்கு பதிலாக ஆக்ஸிலேட்டரை அழுத்தி விடுவோம். செய்யும் காரியம் எதுவாக இருந்தாலும் அதில் கவனத்தை ஒருங்கிணைக்க பழகிக் கொள்ளுங்கள். அதிகம் பேசுபவர்களும் கவனச்சிதறலுக்கு ஆளாகலாம். முக்கியமான வேலையில் ஈடுபடும்போது தேவையற்ற பேச்சு வார்த்தைகளை குறைத்துக்கொள்வது நல்லது. கவனம் என்பது நம் அறிவின் ஆற்றல்.

இதனை தியானத்தின் மூலம் பெறலாம். கண்களை மூடி அமைதியாக தியானம் செய்வதற்கு பழகுவதன் மூலம் கவனத்தை ஒரு புள்ளியில் ஒருங்கிணைக்கலாம். கண்கள் திறந்திருந்தாலும் அதேபோன்ற கவன ஒருங்கிணைப்புக்கு மனம் பழக்கப்பட்டுவிடும். தியானம் பழக ஆரம்பிக்கும்போது, மனம் ஒருநிலையில் நிற்காது. கன்னாபின்னாவென்று கண்டகண்ட சிந்தனைகள் சிறகடிக்கும். நம் கவனத்தை சிதறடிக்கும். படிப்படியாக பயிற்சி எடுத்துக் கொண்டால்.. பழகிக் கொண்டால் தியானம் கைகூடும்.

கோயிலில் சாமி கும்பிடும்போதும், கவனத்தை சாமி மீது வைக்க வேண்டும். சாமி கும்பிட்டுக் கொண்டே சாத்தானைப்பற்றி நினைத்தால், மனதில் நல்ல சிந்தனைகள் தோன்றாது. வேண்டியதை வேண்ட மறந்துவிட்டு வேண்டாதவைகளைப் பற்றி யோசித்துக் கொண்டு இருக்க வேண்டாம்.
மூளையின் கட்டளைப்படிதான் நம் செயல்கள் அமையும். நாம் ஒன்றை செய்து கொண்டிருக்கும்போது இடையில் மூளை வேறு எதையோ சிந்திக்க அனுமதித்தால் அந்த வேலையில் தடுமாற்றம் ஏற்படும்.

கவனம் என்பது செய்யும் செயல்கள் மீது நமக்குள்ள ஈடுபாடு, பொறுப்பு, ஆர்வம், இதையெல்லாம் உள்ளடக்கியது. மன உளைச்சல், குழப்பம், செயலில் உள்ள வெறுப்பு, உடல் சோர்வு போன்ற பல விஷயங்கள் கவனச் சிதறலுக்கு காரணமாக இருக்கின்றன. மனித வாழ்க்கையில் இதெல்லாம் இயல்பான உணர்வுகள்தான். ஆனால் நாம் செய்யும் செயல்கள் எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தவை என்பதை முதலில் நாம் உணர்ந்துகொள்ளவேண்டும். முக்கியத்துவத்தை உணர்ந்தால் மூளை முழு கவனத்தைக்காட்டும். வேலையை ஆரம்பிக்கும்போது முழு கவனத்தையும் அதன் மீது செலுத்தினால், மூளையும் அதற்குதக்கபடி ஒத்துழைக்கும்.

கவனம் என்பது இறந்த காலத்திற்கும், எதிர் காலத்திற்கும் சம்பந்தம் இல்லாதது. நிகழ்காலத்திற்கு மட்டுமே அது சாத்தியமானது. இப்போது நாம் என்ன செய்துகொண்டிருக்கிறோமோ அதிலே முழு கவனத்தையும் செலுத்தி, அதை 100 சதவீத வெற்றிக்கு சாத்தியப்படுத்தவேண்டும்.
மனம் ஒரு குரங்குதான். ஒரு இடத்தில் நிற்காமல் தாவிக் கொண்டே இருக்கும். ஆனால், அதை நாம் சரியான முறையில் பழக்கப்படுத்தி விட்டால், நாம் அதை நம் விருப்பப்படி ஆட்டுவிக்கலாம்.