
ஹெல்த் அண்ட் பியூட்டி இதழினை வழி நடத்தி 27வது ஆண்டில் அடியெடுத்து வைக்க ஆணிவேராக இருந்து வருபவர் டாக்டர் ஜி.ராஜமோகன்.
அவர் பிறந்தது தஞ்சாவூர் நீடாமங்கலத்தில். சென்னை மாநிலக் கல்லூரியில் உளவியல் துறை தலைவராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். பேராசிரியராக பணியாற்றிக் கொண்டே ஹெல்த் அண்ட் பியூட்டி இதழின் ஆசிரியராக பொறுப்பேற்றுக் கொண்டார். அரசு ஊழியர், தனியார் நிறுவனத்தில் பணியாற்றலாமா? என்று கேள்வி எழுந்தபோது.. பத்திரிகைப் பணி என்பது சமூகப் பணி, அறப்பணி. ஊதியம் வாங்காமல் சேவையாக செய்வதில் என்ன தவறு? என்று உரத்த குரலில் நெஞ்சை நிமிர்த்தி கேட்டபோது.. டாக்டரின் நியாயமான குரலுக்கு செவி சாய்த்தது அரசு.
கல்லூரியில் பணியாற்றிக் கொண்டே பத்திரிகைப் பணியை தொடர்ந்தார். மருத்துவத்தை, உளவியலை எளிய தமிழில் மக்களுக்கு கொண்டு சேர்க்க வேண்டும் என்ற தணியாத தாகத்தோடு பத்திரிகைப் பணியை செய்து வருகிறார்.
மாற்று மருத்துவத்தை வளர்க்கவும், மாற்று மருத்துவர்களை ஊக்கப்படுத்தவும் எப்போதுமே அவரது எழுதுகோல் தயாராக இருக்கும்.
ஏழை எளியவர்களுக்கு இலவசமாக சிகிச்சை அளிப்பதற்கு கொஞ்சமும் சலிப்பு காட்டதவர். எந்த நேரத்தில் ஆலோசனை உதவி கேட்டாலும், சிறிதும் முகம் சுளிக்காமல் உதவும் கருணை உள்ளம் கொண்ட மாமனிதர். அவரால் உயர்ந்தவர்கள் பலர். அவர் எப்போதும் ஏணியாகவே இருக்கிறார். உதவி பெற்று உயர்ந்தவர்கள், உதாசீனப்படுத்தினாலும், அவர்களுக்கு எப்போதும் உதவும் உயர்ந்த உள்ளம் கொண்டவர். எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் உழைக்கும் மன வலிமை கொண்ட மக்கள் மருத்துவர். பிரச்னைகள் அவரை சூழ்ந்து கொண்டிருந்தாலும், எழுத்து என்று வந்துவிட்டால் அதில் எந்தப் பிரச்னையும் இருக்காது. தன் கருத்துக்களை ஆணித்தரமாக அதே நேரத்தில் எதிர்க்கருத்துடையோரின் மனம் கோணாமல் எடுத்து வைப்பார்.
மருத்துவம் சேவை என்ற நிலையில் இருந்து வணிகமாகிப் போனதில் அவருக்கு நிறையவே வருத்தம் உண்டு. சடலத்தை வைத்து சம்பாதிக்கும் கார்பரேட் மருத்துவமனைகளின் போக்கை கண்டிப்பதில் எப்போதுமே முன்னிலையில் இருப்பார். வீட்டுக்கு வருபவர்களை மட்டுமல்ல.. உதவி என்று வருபவர்களையும் வெறுங்கையோடு அனுப்பி வைக்க மாட்டார். அவரால் முடியாத காரியம் என்றாலும், அந்தக் காரியத்தை யார் முடிப்பார்களோ அவருக்கு சிபாரிசு கடிதம் கொடுத்து அனுப்புவார். சொந்த சோகங்களை எழுத்தில் எப்போதுமே வடிக்க மாட்டார். அவருடைய தலையங்கங்களில் எப்போதுமே தனித்த ஒரு தத்துவப் பார்வை இருக்கும். அது சாமான்யனுக்கும் சட்டென்று புரியும்படி இருக்கும்.
மருந்தில்லா மனநல சிகிச்சையை (சைக்கோ தெரபி) பயிற்சியை அறிமுகம் செய்தவர். தமிழ்நாடு திறந்த நிலை பல்கலைக்கழகத்தின் மூலம் பல ஆயிரம் சைக்கோ தெ
ரபிஸ்டுகளை உருவாக்கி வருகிறார். ஆரோக்கியம் என்பது உடல் நலத்தையும், மன நலத்தையும் உள்ளடக்குகிறது. மனநல விழிப்புணர்வுக்காக கடந்த 40 ஆண்டுகாலமாக தொடர்ந்து களப்பணியாற்றி வருகிறார்.
பேராசிரியராக, பத்திரிகை ஆசிரியராக, உளவியல் சிகிச்சை நிபுணராக, சைக்கோ தெரபிஸ்டாக, மருத்துவராக விளங்கும் டாக்டர் ஜி.ராஜமோகனுக்கு வயது 74. அவரது பணியை, சேவையை, உழைப்பை பாராட்டி வாழ்த்துகிறோம். அவர் நீடூழி வாழ வாழ்த்துகிறோம்.
வாழ்த்துக்கள் டாக்டர்
என்றும் அன்புடன்
பழ.குணசேகரன்

