புதிய நம்பிக்கை – 8

ஆனந்த சிவா
முந்தைய இதழில் சொல்லப்பட்ட செல்வியின் கதை…
அம்மா, அப்பா இறந்த பின்னர் ஆதரவுக்கு யாருமற்றச் சூழலில் அந்தப் பெண் குழந்தையை – மூன்று, நான்கு மாதங்களில் – ஒரு குடும்பம் தத்தெடுத்து வளர்க்கிறது… தான் பெற்ற மகளைப் போலவே அந்தக் குழந்தையை ஊட்டி ஊட்டி வளர்க்கிறார்கள் அந்தத் தந்தையும் தாயும்… உடன் பிறந்த தங்கையைப் போலவே பாசத்துடன் வளர்க்கிறார்கள் அந்த இரண்டு சகோதரர்களும்… செல்வி மகிழ்ச்சியாக வாழ்கிறாள்… வளர்கிறாள்…
செல்வி பருவம் அடைந்த பின்னர், அவள் வாழ்க்கை முற்றிலுமாக மாறிப்போய் நரகமாக மாறுகிறது… காரணம் வேறு யாருமல்ல… அந்தத் தந்தை, மகன்கள் இருவர் என மூவரும் மிருகங்களாக மாறி, அந்தப் பெண் குழந்தையைப் பாலியல் வன்கொடுமை செய்கிறார்கள்… செய்வதறியாத அந்தப் பெண் குழந்தையான செல்வி. தன்னை வளர்த்தத் தாயிடம் சொல்லிப் புலம்புகிறாள்… ஆனால் அந்தத் தாயோ, ’தன் கணவனும் மகன்களும் அப்படித்தான் இருப்பார்கள், அனுசரித்துப் போ… வெளியில் சொல்லக் கூடாது’ என்று செல்வியை அவளும் மிரட்டி வைக்கிறாள்…
ஒரு குடும்பத்தில் உள்ள அப்பா, பையன்கள், அம்மா என அனைவருமே வக்கிரமாக, கொடூரமாக, இரக்கமற்று வாழ்வதென்பது எவ்வளவு ஆபத்தான நிகழ்வு… அது அந்தக் குடும்பத்துக்கு மட்டுமான நிகழ்வு மட்டுமா..? இல்லை இந்தச் சமூகத்துக்குமானதா..? சிந்தித்துப் பாருங்கள்…
அவர்களின் அந்த வக்கிர முகம் எப்படி எவருக்கும் வெளியில் தெரியாமலேயே இருந்திருக்கும்..?! செல்வி மட்டுமா பெண் குழந்தை, அருகில் இன்னும் எத்தனையெத்தனைப் பெண் குழந்தைகள் அவர்களைச் சுற்றி இருந்திருப்பார்கள்… நினைத்துப் பார்த்தால் நடுக்கமாக இல்லையா..? அவைகள் உங்கள் குழந்தைகள் இல்லையா..?
தங்களின் கொடூரமான முகத்தை வெளிக்காட்டிக் கொள்ளாமல் தத்ரூபமாக நடித்தபடி அவர்கள் வாழ்ந்திருக்கிறார்கள் என்பதும், அந்தப் போலி முகத்தைப் பற்றி அறிந்துகொள்ள, சுற்றியுள்ள ஒருவருக்கும் அறிவுமில்லை, அக்கறையுமில்லை என்பதுமே எவ்வளவு ஆபத்தான நிகழ்வு… இப்படித்தான் இந்தச் சமூகம் இருக்கிறது என்பதை நினைத்தால். ஈரக்குலையே நடுங்கிப் போகவில்லையா..? மனிதர்கள் இதைக்கூட அறிந்துகொள்ள எண்ணாமல் வேறு எதைத்தான் தெரிந்துகொள்ள வேண்டும் என்று நினைக்கிறார்கள்..? இந்தப் போக்கு எவ்வளவு பெரிய பேராபத்தை நோக்கிச் செல்கிறது என்பதை ஏன் நாம் உணர முடியாமல் போகிறது..?
ஒரு குடும்பத்தில் உள்ள ஆண்கள், பெண் என அனைவருமே தங்களின் வக்கிரத்தை மறைத்து வாழ்ந்து கொண்டிருப்பதும், அதை அறிந்து கொள்ளாமலே அவர்களைச் சுற்றி இருப்பவர்கள் வாழ்ந்து கொண்டிருப்பதும் சாதாரணமான நிகழ்வா..? திரி எடுக்கப்பட்ட அணுகுண்டை எதிரில் வைத்துக் கொண்டு எப்பொழுது வெடிக்கும் என்று குலைநடுங்கக் காத்துக் கொண்டிருக்கும் அவல நிமிடங்களைப் போன்றதல்லவா அவை..!? இதைப் பற்றியெல்லாம் சிந்திக்கும் திறன் இல்லாமல், ஒட்டுமொத்தமாக எந்திரங்களாக நாம் வாழ்கிறோம் என்பதன் வெளிப்பாடல்லவா அது..?!
மனிதன் தவறு செய்வது என்பது இயல்பான ஒன்றுதான்… தான் செய்வது தவறு என்று அவனுக்குத் தெரிய வரும்பொழுது தன்னைத் திருத்திக் கொள்கிறான்… ஆனால், ஒரு குடும்பமே எவ்விதக் குற்ற உணர்ச்சியும் இல்லாமல் தவறாக வாழ்வது என்பது இயல்பல்ல… நிச்சயமாக, அது இந்தச் சமூகம் அழிவை நோக்கிச் சென்று கொண்டிருப்பதற்கான அறிகுறிதான்… அதைவிடவும், அவர்களை அறிந்தவர்கள் ஒருவரும் அவர்களை அடையாளம் கண்டுகொள்ளவில்லை என்பது, இந்தச் சமூகத்தை அழிக்க வந்த ஒரு ஆபத்தான நோய்க்கான அறிகுறி என்பதில் சந்தேகமில்லை… (கொரோனாவை விடவும் ஆயிரம் மடங்கு ஆபத்தானது)…
அனைத்தையும் விட உயர்ந்தவன் மனிதன்..?!
மனிதர்களாகிய நாம், மிருகங்களிடம் இருந்தோ அல்லது மற்ற உயிரினங்களிடமிருந்தோ எந்த இடத்தில் வேறுபடுகிறோம் தெரியுமா..? உலகில் உள்ள வேறு எந்த உயிரினத்திடமும் இல்லாமல், மனிதனிடம் மட்டுமே இருக்கும் பகுத்தறியும் சிந்தனையினால்தான்… அதனால் மட்டுமே நாம் தனித்தன்மை உள்ள மனித இனமாகப் பரிமளித்து வாழ்ந்து கொண்டிருக்கிறோம்… அந்தப் பகுத்தறியும் சிந்தனைதான் அனைத்து உயிரினங்களில் இருந்தும் மனிதர்களாகிய நம்மை முற்றிலும் உயர்ந்த, மேம்பட்ட, அனைத்தையும் விட மாறுபட்ட இனமாக அடையாளப்படுத்துகிறது…
அத்தகையச் சிறந்த தகுதி இயற்கையினால் மனித இனத்துக்கு மட்டுமே வழங்கப்பட்டிருக்கும் உயர்ந்த பரிசு… ஆனால், நாம் அதற்கு ஏற்ப, தகுதியுள்ளவர்களாக வாழ்கிறோமா..? நாம் எப்படி வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்று சிந்தித்துப் பாருங்கள்..? பொதுவாகவே இயற்கை எதையும் அனாவசியமாகப் படைக்கவில்லை… இயற்கை உருவாக்கிய அனைத்திற்கும் காரண, காரியங்கள் உண்டு… அப்படித்தான் மனிதனுக்கு மட்டுமே அளிக்கப்பட்டிருக்கும் அந்தச் சிறப்புக்கும் வலுவான காரண, காரியம் இருக்கும்…
ஆனால், அதிலுள்ள சிக்கல் என்னவென்றால், அந்தப் பகுத்தறியும் சிந்தனையை எளிதில் அனைவரும் பயன்படுத்திவிட முடியாதவாறு, மூளைக்குள் புதைத்து வைத்திருக்கிறது இயற்கை… தோண்டிப் பார்ப்பவர்களால் மட்டுமே அந்தப் பகுத்தறியும் சிந்தனையைப் பெறமுடியும்… மூளையைத் தோண்டிப் பார்ப்பதற்கும் கூடக் கற்றுக் கொடுக்க வேண்டும்… ஆம்..! கற்றுக் கொடுக்கப்பட வேண்டும்… நம் சமுதாயத்தில் அப்படிக் கற்றுக்கொடுக்கப்படுகிறதா என்றால், பெரும்பாலும் இல்லை என்றுதான் சொல்ல வேண்டியிருக்கிறது… நம்முடைய கல்வி அமைப்போ, சமுதாய அமைப்போ பகுத்தறியும் சிந்தனையை, அந்த எண்ணத்தை, கருத்தை, பழக்கத்தை, வழக்கத்தை, கடமையை, கட்டாயத்தை சிறு வயதில் இருந்தே மனிதர்களிடம் உருவாக்குவதே இல்லை…
அதைவிடவும் மோசமானது, முடிந்த அளவுக்கு எந்த வகையிலும் மூளையை நாம் பயன்படுத்திவிடக் கூடாது என்கிற நிலைப்பாட்டில் கல்வி நிறுவனங்களும், கார்ப்பரேட் நிறுவனங்களும் (சில விஷயங்களில் அரசுகளுமே கூட) மிகவும் கவனமாகவும் உறுதியாகவும் இருக்கிறார்கள்…
மூளையைச் சரியாக, முறையாகப் பயன்படுத்தாமல் எந்தக் காலத்திலும் நமக்குப் பகுத்தறியும் சிந்தனை உருவாகப் போவதில்லை… உங்களால் பகுத்தறிய முடியாமல் போனால், நீங்கள் ஒருக்காலும் மனிதனாக வாழமுடியாது… அப்படித்தான் செல்வியைத் தத்தெடுத்துக் கொண்ட அந்த மனிதர்களுக்கும் நிகழ்ந்திருக்கிறது…
இவை எல்லாவற்றையும் மீறித்தான் நாம் நம் பகுத்தறியும் சிந்தனையை மீட்டெடுத்துக்கொள்ள வேண்டும்… இல்லையென்றால் இந்தச் சமுதாயம் எப்படிப்பட்ட சீரழிவுகளையெல்லாம் சந்திக்கும் என்பதைச் சொல்லும் ஆயிரக்கணக்கான நிகழ்வுகளில் ஒரு சின்ன எடுத்துக்காட்டுத்தான் அந்தப் பெண் குழந்தை செல்விக்கு நடந்த பாலியல் வன்கொடுமை…
இத்தனை உயரம் வளர்வோமா என மரங்கள் சிந்திப்பதில்லை..!
பறவைகள், விலங்குகள், பூச்சிகள் போன்ற உயிரினங்களிடம் இருக்கும் அன்புப் பரிமாற்றங்களையும், இனப்பெருக்கம் மற்றும் உணவுக்கானப் போராட்டங்களையும் பார்த்திருப்போம்… அறிந்திருப்போம்… இயற்கையாகவே அவைகளிடம் அப்படிப்பட்ட சில உணர்ச்சிகள் இருக்கும்… அதுதான் அந்தந்த இனங்கள் அழிந்து போகாமல், நிலைத்திருக்க இயற்கை அமைத்திருக்கும் ஒழுங்கு… பறவைகள், விலங்குகள் போன்றவைகளிடம் இருக்கும் அந்தச் செயல்கள், அவைகளிடம் இருக்கும் இயற்கை குணம் அல்லது அனிச்சைச் செயல்கள் எனச் சொல்லலாம்… அவைகள், எதையும் பகுத்தறிந்து செய்வதில்லை… சிந்தித்தும் செய்வதில்லை… நாம் அன்பு காட்டினால்தான் மனிதர்களோ அல்லது மற்ற உயிரினமோ நம்மிடம் அன்பு காட்டும் என்கிற பகுத்தறிவு விளங்குகளுக்கோ, பறவைகளுக்கோ அல்லது மற்ற உயிரினங்களுக்கோ இருப்பதில்லை…
காரணம் அவைகளின் மூளையில் அப்படிப்பட்ட அமைப்பு இல்லை… இயற்கை மனிதனுக்கு மட்டுமே அப்படிப்பட்ட சிறந்ததொரு வடிவமைப்பை உருவாக்கிக் கொடுத்திருக்கிறது…
மனிதர்கள் மட்டுமே, எந்தவொரு செயலைச் செய்யும் பொழுதும், ’அதைச் செய்தால் நமக்கு அதனால் இந்தப் பிரதிபலன் கிடைக்கும்’ என்றும், ‘நாம் அப்படிச் செய்தால் அதனால் நமக்கு இந்தச் சிக்கல்கள் வரும்’ என்றும் எந்த ஒரு செயலைச் செய்வதற்கு முன்னாலும் அதைப் பற்றிக் கொஞ்சம் சிந்தித்து, பகுத்தறிந்து அதன் பின்னர் அந்தச் செயலைச் செய்யலாமா? செய்யாமல் விட்டு விடலாமா? என்று முடிவெடுத்து செயல்படும் திறனை கொண்டிருக்கிறான்…
நம்பிக்கை என்பதெல்லாம் மற்ற உயிரினத்திடம் இல்லை… எந்தக் கொடிக்கும் தன்னால் இத்தனை உயரமான மலை மீதோ அல்லது மரத்தின் மீதோ ஏறிப்படர முடியுமா என்கிற சிந்தனையெல்லாம் ஏற்படுவதில்லை..? எந்த மரமும் தான் இவ்வளவு உயரமாக, பருமனாக, வலுவாக வளர்வோமா? என்றெல்லாம் யோசிப்பதில்லை…
அதுதான் அறிவியல்… அதுதான் இயற்கை… மனிதர்களின் மூளை அந்த வகையில்தான் வடிவமைக்கப் பட்டிருக்கிறது… அதன் அவசியம் கருதித்தான் மனித மூளைக்குள் இயற்கை அத்தனைச் சக்தியையும் பொதித்து வைத்திருக்கிறது…
ஆனால், நாம் எதையும் புரிந்து கொள்ளாமல், எதைப் பற்றியும் கவலைப்படாமல், மூளையைப் பயன்படுத்துவதை கொஞ்சம் கொஞ்சமாக குறைத்துக் கொண்டே வருகிறோம்… விளைவு, பகுத்தறியும் சிந்தனை பறி போய்க்கொண்டே இருக்கிறது… மனிதர்கள் முற்றிலுமாக மாறிக் கொண்டிருக்கிறோம்… மிருகமாகவா..? அல்லது வேறு ஏதேனும் உயிரினமாகவா என்பது மட்டும் தெரியவில்லை..?
மனிதனாக இல்லாத ஒருவனிடம் எவ்விதமான நம்பிக்கையும் இருக்க வாய்ப்பில்லை… சில சமயங்களில், சில மனிதர்கள் மனிதனாக இல்லாமல் போனாலும், அதற்காக அவர்கள் மிருகமாகத்தான் இருக்க வேண்டும் என்றும் உறுதியாகச் சொல்லிவிட முடியாது… சொல்லவும் கூடாது… மனிதனாக இல்லாமல், எதுவாகவுமில்லாத எதுவாகவோ அல்லது எவராகவோ கூட மனிதர்கள் இருக்கவும் வாய்ப்புண்டு… அந்த எதுவாகவோ அல்லது எவராகவோ இருப்பவர்கள் கல்வி கற்றிருக்கலாம், பணம் பெற்றிருக்கலாம், பதவிகளை அடைந்திருக்கலாம்… இப்படி, சமூகத்தில் அனைத்து வசதி வாய்ப்புகளையும் பெற்றிருக்கலாம்… ஆனால், மனிதனாக இருக்க முடியாது… அப்படிப்பட்டவர்கள்தான் செல்வி என்ற அந்த அப்பாவிப் பெண் குழந்தையை வளர்த்தவர்கள்… இப்படித்தான் இந்தச் சமூகம் உருவாகிக் கொண்டிருக்கிறதோ என்கிற அச்சம் கொஞ்சம் கொஞ்சமாக மேலோங்கி வருகிறது… இந்த அச்சத்தை யார் போக்கப் போகிறார்கள்..?! எப்படி? எப்போது? என்றைக்குப் போக்கப் போகிறார்கள்..?
(தொடரும்…)

